உத்தவ் தாக்கரே முதல்வர் பதவிக்கு கொரனாவால் சிக்கல்!

slider அரசியல்

 

UDHAV-THAKRE

 

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். இவருடன் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அரசில் பங்கு வகிக்கின்றன. இந்த மூன்று கட்சிகளிடையே எந்த பிரச்னையும் வெடிக்கவில்லை. கூட்டணி அரசு சுமூகமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், வேறு ஒரு ரூபத்தில் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இது மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் புயலை தற்போதைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்தாலும் எம்.எல்.ஏ.ஆக இன்னும் பதவி வகிக்கவில்லை. ஒருவர் முதலமைச்சர் பதவியில் தொடர வேண்டுமானால் ஆறு மாதத்திற்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அல்லது எம்.எல்.சி.யாக ஆகவேண்டும். இந்த விதியின்படி வருகிற மாதம் மே 28-ம் தேதிக்குள் எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி., என ஏதாவது ஒரு பதவிக்கு உத்தவ் தாக்கரே தேர்வாக வேண்டும். எம்.எல்.சியாக ஆவது என்றுதான் உத்தவ் தாக்கரே ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். இதன்படி மகாராஷ்டிராவில் வரும்  ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறுவதாக இருந்த எம்.எல்.சி. தேர்தல் மூலம் தனது முதலமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இதில் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து கொரோனாவினால் இந்தியா முடக்கப்பட்டிருக்கிறது. அது இப்போது வரைக்கும் நீடிக்கிறது. அடுத்த மாதமும் இது தொடரும் என்பதால், மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையத்தால் நடக்கவிருந்த எம்.எல்.சி., பதவிக்கான தேர்தல்  தள்ளி வைக்கப்பட்டது. இது உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

 

இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் பொருட்டு கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக இருக்கும் இரண்டு எம்.எல்.சி. பதவிகளில் ஒன்றில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கடந்த 6-ம் தேதியே மாநில அமைச்சரவை பரிந்துரை செய்திருந்தது. இது தொடர்பாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடிய பின்னரும் இன்னும் உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சி.யாக கவர்னர் நியமிக்கவில்லை.

இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில்,  ‘’ராஜ்பவன் அரசியல் சதித்திட்டத்தின் கூடாரமாக மாறக்கூடாது. அரசியலமைப்பிற்கு மாறாக நடந்து கொள்பவர்களை வரலாறு சும்மாவிடாது’’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை குறிப்பிட்டுள்ளதால் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸைவிட பல்வேறு பிரச்னைகளில் சிவசேனைக் கட்சி கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது. இந்தப் போக்கு பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியாக இருந்தபோதும் சிவசேனைக் கட்சி கொண்டிருந்த வழக்கம் தான் என்றாலும் அப்போது எடுத்துக் கொண்டதுபோல் இப்போதும் பா.ஜ.க. எடுத்துக் கொள்ளும் என்று சொல்வதற்கில்லை. மேலும், தற்போதைய கொரானா விஷயத்திலும் ராகுல் காந்தியின் பேச்சுக்களை பாராட்டும் போக்கையும் உத்தவ் தாக்கரேவிடமிருந்து காணமுடிகிறது. இது யாவும் இந்த எம்.எல்.சி. விவகாரத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு சறுக்கலாக முடியவும் அதிக வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்