கொரானா பரவலுக்கு காரணம் ஒபாமாதான் – டிரம்ப்!

slider அரசியல் உலகம் மருத்துவம்

 

TRUMP-OBAMA

 

உலகளவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கைகளிலும், பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக, கொரானாவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் அமெரிக்கா தவித்து வருகிறது என்பதே உண்மை. அங்கு தற்போதைய நிலவரப்படி 5,87,173 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 20,644 பலியாகியுள்ளனர் என்பதை வைத்துப் பார்க்கும்போது அமெரிக்கா கொரோனாவிடம் பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது என்கிற உண்மை புலப்படும். இதுமாதியான நெருக்கடி நிலையில் அதிபர் டிரம்ப் கொரானாவுக்கான பழியை முன்னாள் அதிபர் ஒபாமா மேல் சுமத்தியிருப்பது உலக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவினால் அமெரிக்கா சந்தித்துள்ள பெரும் நெருக்கடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்    முதலில் சீனா மீது பழியை போட்டார். ஆனால், சீனாவின் உதவி தற்போதைக்கு தேவை என்பதால், சீனாவை விமர்சனம் செய்வதை நிறுத்தினார். இதன்பின் உலக சுகாதார மையத்தை விமர்சனம் செய்தார். இது உலக நாடுகளுக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனால் இதனையும் நிறுத்தினார். இப்போது புதியதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மீது பழிபோடத் தொடங்கியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு டிரம்ப்  பேசுகையில், “கொரோனாவிற்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். அமெரிக்காவின் இந்த பின்னடைவுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. எங்களுக்கு இருக்கும் சூழ்நிலை இதுதான். அதாவது, எங்களுக்கு இருக்கும் சூழ்நிலைக்குள் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். என்னால் இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்க முடியாது. எங்களுக்கு முன்னாள் இருந்தவர்கள் செய்த தவறு இது.

எங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தவறான விதிகள், திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள். அந்த விதிகளை வைத்துக் கொண்டு கொரோனா போன்ற பெரிய பேரிடரை சமாளிக்க முடியாது. இப்படி ஒரு பெரிய பேரிடரை கருத்தில் கொண்டு அந்த விதிகளை முன்னாள் அதிபர் ஒபாமா உருவாக்கவில்லை. அமெரிக்காவில் இதற்கு முன் பன்றிக் காய்ச்சல் எச்-1, என் -1 ஆகிய வைரஸ்களை இப்படித்தான் எதிர்கொண்டது. அப்போதும் அமெரிக்கா பெரிய அளவில் டெஸ்ட் செய்யவில்லை.

குறிப்பாக, எச்-1 ,என்-1 வைரஸ் வந்தபோது அமெரிக்கா இப்படி பெரிய டெஸ்ட்களை செய்யவில்லை. இதனால் ஒபாமா இருந்தபோது 14 ஆயிரம் பேர் பலியானார்கள். அவர்கள் கொண்டுவந்த சில சட்டம் காரணமாக மக்களை சோதித்துப் பார்ப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஒபாமா கொண்டுவந்த இந்த சட்டம்தான் இன்று எங்களுக்கும் தடையாக இருக்கிறது. இந்த வைரஸ் தீவிரம் எடுக்க அவர்தான் காரணம். கொரோனா டெஸ்ட் செய்ய இதுதான் தடையாக இருக்கிறது. அதை நாங்கள் மாற்றி இருக்கிறோம். நாங்கள் இறுதியாக ஒபாமா கொண்டுவந்த சட்டத்தை மாற்றினோம். இனிமேல் கொரோனா சோதனைகளை விரைவாக மேற்கொள்வோம். உடனே முடிவுகளை அறிவிப்போம். இதனால் விரைவில் அமெரிக்கா கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வரும் என்று நம்புகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

  • எம்.டி.ஆர். ஸ்ரீதர்