மத்திய அரசின் புதிய திட்டம்!  

slider அரசியல்
Red-Green–Orange-Zone

 

கடந்த மாதம் 25-ம் தேதி ஆரம்பித்த ஊரடங்கு நாளையுடன் (14.4.2020) முடிவடைகிறது. பிரதமர் மோடி நாளை காலை ஊரடங்கு குறித்து புதிய அறிவிப்புகளை தெரிவிக்கவுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 30-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்துள்ளார். அதேநேரத்தில் மத்திய அரசு சார்பில் நாளை ஊரடங்கு மற்றும் அது எந்தவகையில் செயல்படும் என்பது குறித்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது பொது மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியிருக்கிறது.

கடந்த வாரங்களில்  அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. இதில் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்கிற கருத்தை பிரதமர் மோடியிடம் தெரிவித்தனர். மேலும், இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது முடிவை அறிவிப்பதற்கு முன்பே ஒடிசா, தெலுங்கானா, மஹராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம்  உள்ளிட்ட சில மாநிலங்கள், ஊரடங்கை இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் நாடு முழுதும் பரவாமல் தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்றாலும், இதனால் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். நாடு எங்கும் அனைத்து தொழில்களும் நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும்,  தினக்கூலி தொழிலாளர்கள், மாதச் சம்பளதாரர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு ஒருவேளை உணவு கிடைப்பதே சிரமமாக உள்ளது.

இதனடிப்படையில் பிரதமர் மோடி  ‘மக்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு பொருளாதாரமும் முக்கியம்’ என்று சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதன் காரணமாக ஏப்ரல் 14 –ம் தேதிக்குப் பிறகு  ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடித்தாலும், சில அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அரசு வட்டாரங்கள் இது குறித்து  கூறுகையில், “ஏப்ரல்  14-ம் தேதிக்குப் பிறகு  கொரோனா பாதிப்பின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று மூன்று மண்டலங்களாக நாட்டின் பகுதிகள் பிரிக்கப்பட இருக்கிறது. இதன் அடிப்படையில் சில முக்கிய திட்டங்களையும், நடைமுறைகளையும் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, வேலை இழப்பு, பொருளாதார பாதிப்பு ஆகியவற்றை தடுப்பதற்காக மாநில அரசுகளின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் எந்த பணியும் நடக்கவில்லை. துறைமுகங்களிலும், கப்பல்களிலும் சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. இதனாலும் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பு ஏற்படலாம். எனவே, இந்த பிரச்னைக்கும் தீர்வு அறிவிக்கப்படலாம்.  இதற்காகத்தான் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என, மூன்று மண்டலங்களாக நாட்டை பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலம் :

கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாகவுள்ள அல்லது நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். இந்த பகுதிகள் முற்றிலும் முடக்கப்படும். இங்கு தற்போது உள்ளதைவிட மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்களை வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே அனுமதிப்பது போன்ற நடவடிக்கைககள் செயல்படுத்தப்படலாம். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆரஞ்சு மண்டலம் :

கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள அல்லது கடந்த சில நாட்களாக பாதிப்பு முற்றிலும் இல்லாத பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்படும். இங்கு  கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட வாய்ப்புள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முழுமையான அனுமதி வழங்கப்படும். பொதுப் போக்குவரத்தும் கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட அளவில் இயக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பச்சை மண்டலம் :

கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லாத பகுதிகள் பச்சை மண்டலத்துக்குள் வரும். பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படும். இங்கு சிறு மற்றும் குறு தொழில்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படும். இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் சமூக விலகல் நடைமுறையை பின்பற்ற உத்தரவிடப்படும். மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி பணியாற்றும்படி இவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

  • தொ.ரா.ஸ்ரீ.