தி.மு.க. பக்கம் நெருங்குகிறதா பா.ஜ.க.?

slider அரசியல்

 

MODI-STALIN

 

சில தினங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். அந்த வகையில் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும், எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலியுடனும் ஆலோசனை செய்தார். இதில் இப்போது வேறு ஒரு அரசியல் மாற்றம் ஏற்படவிருப்பதாக பேச்சுகள் கிளம்பியுள்ளன. தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே இணக்கம் எற்பட்டிருப்பதாகவும் அந்த பேச்சுக்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம் குறித்து தி.மு.க. ஒரு அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டிருந்தது. அதில் தி.மு.க. தலைவருடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார். நலம் விசாரித்தார், கழக தலைவர் அவரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தினார் என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில், ’இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தி.மு.க. தலைவரை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்’ என்ற வரிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த வரிகள்தான் இப்போது தி.மு.க. பக்கம் பா.ஜ.க. நெருங்கிறதா என்கிற கேள்வியையும், எதிர்பார்ப்பையும் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

கொஞ்சநாளுக்கு முன்பு தி.மு.க. தலைவரின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் அளிக்க தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி போன்றோர் பிரதமரை சந்தித்துள்ளனர். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது, “நீங்கள் பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டாம். அதற்காக ஏன் காங்கிரஸுடன் இன்னும் கூட்டணி வைக்க வேண்டும்? காங்கிரஸை மட்டும் கூட்டணியில் இருந்து விலக்கினால் தி.மு.க.வை எந்த தொந்தரவும் செய்யமட்டோம்’’ என்று சொல்லியதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தைஃ பொறுத்தவரை ஏதாவது ஒரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் தான் இப்போதுவரை பா.ஜ.க.வின் நிலையாக இருந்து வருகிறது. அ.தி.மு.க.வை ரொம்ப காலத்துக்கு காப்பாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதும், அதேநேரத்தில் அ.தி.மு.க.விடமிருந்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் எதிர்பார்க்கும் 50க்கும் மேற்பட்ட சீட்டுகள் கிடைக்காது என்கிற யதார்த்தம் அறிந்ததின் பின்னணியிலும் தி.மு.க. பக்கம் நெருங்கியும், தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸை கழட்டிவிட்டால் தேசிய அளவிலும், மாநில அளவிலும் நல்ல பயன் தங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிற அரசியல் கணக்கையும் டெல்லி பா.ஜ.க. போட்டிருக்கவும் நிறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.