அமைச்சர் விஜயபாஸ்கருக்கு என்ன ஆனது – அழகிரி கேள்வி!

slider அரசியல்

 

K-S-AZHAGIRIதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் தற்போது சுகாதார அமைச்சராக இருந்து வரும் விஜயபாஸ்கர் பிப்ரவரி மாதம் கடைசியிலிருந்தும் மார்ச் முதல் வாரம் வரைக்கும் சுகாதார அமைச்சராக கொரானா பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஊடகங்களிடமும் பேசி வந்தார். இப்போது இரண்டு வாரமாக இவருக்குப் பதிலாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ்தான் ஊடகங்களிடமும் பேசி வருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென்று காணாமல் போனது பற்றி பல்வேறு அரசியல் தகவல்கள் நாளும் பூதமாக புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்று முதல்வருக்கும், அமைச்சர்கள் சிலர்களுக்குமிடையே கோஷ்டி பிரச்னையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் இது குறித்து கேள்வி எழுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (7.4.2020)  ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து தமிழகம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 5 -ம் தேதி வரை 4612 பேருக்கு தான் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா நோய் இருக்கிறதா, இல்லையா என்கிற பரிசோதனை நடத்தப்படவில்லை. இதனால் அவர்கள் பீதியுடன் இருந்து வருகிறார்கள்.

மேலும், தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாக ஊடகங்களின் பார்வையில் தென்படாமல் இருக்கிறார். இச்சூழலில் புதுக்கோட்டையில் கடந்த ஞாயிறன்று தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார். கொரானா தொற்று நோய் பற்றிய செய்திகளுக்காக பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் இப்போது ஊடகங்களை சந்தித்து வருகிறார்.   இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதியோடு பரிசோதனைக் கருவிகள், சுவாசக் கருவிகள், முகக் கவசங்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உடனடியாக பெறுவதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக மக்களை அச்சுறுத்தி, பீதியில் ஆழ்த்தி வருகிற கொரோனா தடுப்பு சிகிச்சையில் சில குறைபாடுகள் இருப்பதை ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற முறையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

தமிழகம் கொரானாவினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஊரடங்கு இப்படியே நீட்டிக்கபட்டால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் புதியதாக எழுந்து எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு சூழல் உள்ள நிலையில் அதிகாரத்தில் இருப்பவர்களிடையே அதிகாரப் போட்டி என்பது மக்கள் நலனை பாதிக்கும் ஆபத்தாக மாறும் என்பதை உணர்ந்து முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

  • தொ.ரா.ஸ்ரீ.