ஆளும் கட்சிக்கு உதவும் எதிர்க் கட்சித் தலைவர்!    

slider அரசியல்

TK-SIVAKUMAR-EDIYURAPPA 

தென்னிந்திய அளவில் கொரானா பாதிப்பில் தமிழகம், கேரளவுக்கு அடுத்த இடத்தில் கர்நாடகம் இருந்து வருகிறது. அங்கு பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. முதல்வராக எடியூரப்பா இருந்து வருகிறார். அங்கு பிரதான எதிர்க் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இங்கு மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் இருக்கிறார். கொரானா தொற்றை முன்னிட்டு இவரது செயலும் பேச்சும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைந்துள்ளது. இது கர்நாடகாவில் மட்டுமல்ல தேசிய அளவிலும் பெரும் பேச்சாக மாறியிருக்கிறது.

கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் நேற்று (6.4.2020) செய்தியாளர்களிடம் பேசுகையில், “கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் சார்பில் கிருஷ்ண பைரேகவுடா எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு போர் அலுவலகத்தை அமைத்துள்ளோம். மேலும் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரிகள், மருத்துவ கல்வி மந்திரிகள் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளோம். அதில் எங்கள் கட்சியை சேர்ந்த டாக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். அந்த ஆலோசனைகள் அரசுக்கு தெரிவிக்கப்படும். மனித குலத்திற்கு ஆபத்து நாசத்தை ஏற்படுத்தி வரும் இந்தக் கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும். ஆனால், சிலர் இதைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய ஆபத்தான நேரத்தில் யாரும் அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை. முதலமைச்சர் எடியூரப்பா அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில் நாங்கள் பங்கேற்று சில ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டவுள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் மருத்துவ பணியாளர்கள், போலீஸாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.”  என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பிரதான எதிர்க் கட்சித் தலைவரிடமிருந்து இந்த நெருக்கடியான நேரத்தில் மெச்சத்தகுந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை காண முடிகிறது. மேலும், கர்நாடகாவில் காங்கிரஸ் முன்பு பலமுறை ஆட்சி செய்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க. பலமுறை ஆட்சி செய்துள்ளது. அங்கே எதிர்க் கட்சியானது தன்னால் முடிந்த செயல்களை நலக் குழுக்கள் அமைத்து தங்கள் கட்சி முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள். தங்கள் கட்சி மருத்துவர்கள் என்று கொரானாவிலிருந்து மக்களை காப்பாற்றும் காரியத்தில் அரசாங்கம் ஒரு பக்கம் என்றால், தாங்கள் ஒரு பக்கம் என்று களத்தில் இறங்கியுள்ளது. இதோடு ஓப்பிடுகையில் தமிழகத்தில் எதிர்க் கட்சியாக தி.மு.க. நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளதாகவே கருத தோன்றுகிறது.

  • தொ.ரா.ஸ்ரீ.