மீண்டும்   சேம் சைடு கோல் அடித்த சுப்ரமண்ய சுவாமி!

slider அரசியல்

 

சீனாவின் வூகான் நகரில் டிசம்பர் முதல் வாரத்தில் பரவிய கொரான, வெகு வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, சீன அரசு பல்வேறு துரித தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, வூகான் நகரை தனிமைப்படுத்தி கொரானா தடுப்பு சிகிச்சைகளை தொடங்கியது. இதனால் சீனாவின் பிற பகுதிகளுக்கு கொரானா பரவுவது உடனடியாக தடுக்கப்பட்டது. இந்தத் தகவல் அப்போதே அனைத்து நாடுகளின் ஊடகங்களிலும் வந்து கொண்டுதான் இருந்தன. இதன் பின்னணியில் ரஷ்யா, தென்கொரியா போன்ற நாடுகளில் ஜனவரியிலும், பிப்ரவரி முதல் வாரத்தியிலும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் மார்ச் மாதங்களில் தான் உஷாராகி விழித்துக் கொண்டன. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க் கட்சிகள் தற்போது கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், இதே கேள்வியை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் எம்.பியான சுப்ரமண்ய சுவாமியும் கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மார்ச்  22- ம் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அறிவித்தார். அதற்கு மக்கள் ஆதரவு பெரியளவில் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டது. இப்படி 144 ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பிறகும் கூட தலைநகர் டெல்லியில் தப்லிக் ஜமாத் அமைப்பு சார்பில்  1000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்ட கூட்டம் டெல்லியிலுள்ள மசூதி ஒன்றில் நடைபெற்றுள்ளது. இதன் விபரம் சற்று தாமதமாகவே டெல்லி அரசுக்கு தெரியவந்து அதன்பிறகு மத்திய அரசே நேரடியாக களத்தில் இறங்கி அங்குள்ளவர்களை மருத்துவ பரிசோதனை செய்து தனிமைப்படுத்தியுள்ளனர். இவையாவும் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் நடந்துள்ளது. இப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் முன்பு இதில் கலந்து கொண்டவர்களில் பல பேர் தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கும் சென்றுள்ளனர். இவர்களில் பலருக்கு கொரானா அறிகுறியும், பாதிப்பும் இருப்பது மருத்துவ பரிசோதனைகளின் வாயிலாக இப்போது தெரிய வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு ஒரே நாளில் எகிறியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில்தான், இது குறித்து தற்போது சுப்ரமண்ய சுவாமி தனது ட்வீட்டரில், “வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு பிப்ரவரி மாதமே ((பிப்ரவரி 1-ம் தேதி வாக்கில்) தடை விதித்திருந்தால் தப்லீக் மாநாடு தொடர்பாக எந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.. வெளிநாட்டவர்கள் முன்கூட்டியே வர தடைவிதிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய இந்தியர்களை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தியிருந்தால் இந்த குழப்பமே எழுந்திருக்காது. இந்த தடை ஏன் தாமதமானது?” என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி    பதிவிட்டுள்ளார்.

இப்படியான சூழ்நிலை நிலவும் நேரத்தில் எதிர்க் கட்சிகள் பக்கமிருந்து இப்படி ஒரு கேள்விகள் வரும்போது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அதனை எளிதில் சமாளித்துவிடும். ஆனால், தங்கள் பக்கமிருந்தே அதேபோன்ற கேள்வி எழும்போது அதனை சமாளிப்பது என்பது பெரும் தர்மசங்கடத்தையும் அரசியல் மற்றும் தேர்தல் கணக்கில் எடுத்துக் கொண்டால் பின்னடைவை தருவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.