மூன்றாம் உலகப் போராய் மாறும் கொரானா!

slider உலகம்
ANTONYO-CUTTERS

 

உலக வல்லரசுகளாகவும், பணக்கார நாடுகளாகவும் கருதப்பட்ட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளையே குறிவைத்து உலுக்கி வருகிறது கொரானா. இந்த நாட்டின் அரசுகளும், பொது மக்களும் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். இதில், கொரானா ஆரம்பான சீனா மட்டும் மெல்ல மெல்ல பாதிப்பிலிருந்து விடுபடத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தை தங்களின் ஓர் அங்கமாக கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டர்ஸ் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், “ஐக்கிய நாடுகள் அவையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இதுபோல ஒரு உலக சுகாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. சுகாதார நெருக்கடியை விட மிகவும் தீவிரமானது. இது ஒரு மனித நெருக்கடி’’ என்று கூறினார்.

இவரிடம் செய்தியாளர்கள், “ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட பிறகு மிக மோசமான உலக நெருக்கடியாக  ஏன் கொரோனா பெருந்தொற்றை நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஆண்டனியோ கட்டர்ஸ்,  “ஒருபுறம் உலக மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இன்னொரு புறம் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர உடனடியாக ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. மேலும்,  பரிசோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகிய சுகாதார திறனை அதிகரிக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்கள் நடைபெற்றன. 1914ம் ஆண்டில் ஆரம்பித்த முதல் உலகப் போர் இரண்டு, முன்று ஆண்டுகளில் முடிவடைந்தது. இதில் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். அடுத்த உலகப்போர் முப்பது ஆண்டுகள் இடைவெளியில் 1940களில் நடந்தது. இதில் ஏறக்குறைய பத்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று புள்ளி விபரம் கூறுகிறது. இதோடு கடந்த நூற்றாண்டில் உலகப்போர் அளவுக்கு எந்த யுத்தம் நிகழ்வில்லை. ஆனால், தற்போதைய நூற்றாண்டில் இதுவரையான இருபதாண்டில் முதல் தடவையாக உலகப் போர் அளவுக்கு மக்களை பலிவாங்குவதில் வீரியம் அடைந்து வருகிறது கொரானா. மக்கள் துப்பாக்கிகளாலும், அணுகுண்டுகளாலும் பலியானாலும், தொற்று நோய் போன்று கொள்ளை நோய்களால் பலியானாலும் அதனால் மனிதகுலம் பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டர்ஸின் கூற்றுப்படி மூன்றாம் உலகப் போர் அளவுக்கான சவால் இந்த கொரானா என்று பேசியுள்ளது உலகளவில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்