கொரானாவுக்காக மோதும் எடப்பாடி – ஸ்டாலின்!

slider அரசியல்

eps-stalin 

தமிழக சட்டமன்றத்தின் பலத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வைவிட சொற்ப எண்ணிக்கையிலே தி.மு.க. பின்தங்கியிருக்கிறது. இதை இப்படியும் சொல்லலாம். தி.மு.க.வைவிட சற்றே கூடுதலாகவுள்ள அ.தி.மு.க. ஆளுங்கட்சியாகவுள்ளது. இதுதான் இன்றைய தமிழக நிலை. இதில் கொரானா என்பது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் தமிழகமும் தப்பவில்லை. இது அனைவருக்குமான பொது விஷயமாகவுள்ளது. ஜனநாயகத்தில் மக்களுக்கான பொது விஷயங்களில் எதிர்க் கட்சிக்கும் அதிக பங்கிருப்பதே நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. இதனடிப்படையில் எதிர்க் கட்சித்  தலைவர் ஸ்டாலின் கொரானா குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினார். இதனை முதல்வர் நிராகரித்துள்ளார். இது இப்போது தி.மு.க. – அ.தி.மு.க.விடையே பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். அந்த வேண்டுகோளில், “இந்த பேரிடரை போர்க்கால அடிப்படையில் சந்திக்க ஆளுங்கட்சி, எதிர்கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும். இப்பேரிடரை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள  தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் பிரச்சினை இருக்குமெனில்,‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யலாம். தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவும், அச்சம் நீங்கவும் நாம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து செயலாற்ற வேண்டும். இதை நீங்கள் மட்டும் தனித்து நின்று துடைத்திட முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக நின்று செயல்பட வேண்டிய நேரம் இது. மாநிலம் முழுக்க உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று தனது வேண்டுகோளில் தெரிவித்திருந்தார்.  ஸ்டாலினின் இந்த டுவிட்டர் வேண்டுகோளை முதல்வர் பழனிசாமியும் உடனடியாக டேக்கும் செய்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், “எதிர்க் கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது. நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரியசிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா என பார்க்க வேண்டும். இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை’’ என்று கடுமையான தொனியில் முதல்வர் பழனிசாமி தனது ட்வீட்டில் ஸ்டாலினுக்கு பதில் போட்டுள்ளார்.

முதல்வரின் இந்த ட்வீட்டுக்கு பதிலடியாக  ஸ்டாலின், “அனைத்துக் கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். முதல்வர் பழனிசாமி அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம்’’  என்று குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலிம் மிகவும் உருக்கமாக  விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தை  கடுமையான தொனியில் முதல்வர் பழனிசாமி மறுத்திருப்பதை முன்னிட்டு சமூக வலைத் தளங்களில் தி.மு.க. – அ.தி.மு.க.வினரிடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி  கொரோனாவிற்கு எதிராக சீனாவுடன் மோதிக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்கூட இப்போது சீனாவுடன் நட்பாக சென்றுள்ளார். அதேபோல் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் ஒன்றாக சேர்ந்து கொரானா நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. மகாராஷ்டிராவில் மூன்று பிரதான மாநில கட்சிகள் ஒன்றாக களத்தில் இறங்கி போராடி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கட்சி, தன்னுடைய கூட்டணிக் கட்சியான பா.ம.க. சொல்லும் ஆலோசனைகளை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையே நீடிக்கிறது. “இப்போதைய நெருக்கடி சூழ்ந்த நிலையில் அனைது கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதே மக்களுக்கு முழு நன்மை பயக்கும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.