எழுவரையும் பரோலில் அனுப்புங்கள் – அற்புதம்மாள்! 

slider அரசியல்

 

Arputhammal

 

இந்தியாவெங்கும் கொரானா தொற்று நோய் ஆபத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளிலுள்ள சிறைவாசிகளை பரோலில் விடும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது மகாராஷ்டிரா மாநிலம். குறிப்பாக, ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் சிலரை இப்படி பரோலில் அனுப்பி வருகிறார்கள். மேலும், சிறைச்சாலைகளில் மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரையும் பரோலில் விடும்படி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனாவின் வேகம் ஒவ்வொரு நாளும் அதிகரித்தபபடி இருக்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளது. பொது மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். எனவே, சமூக விலகலை பின்பற்றும் விதமாக சில சிறைச்சாலைகளிலுள்ள சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதே வேளையில், பரோலில் செல்ல முடியாத சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இதனால் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் சிறைத் துறை அதிகாரிகளிடம் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து 58 நவீன செல்போன்கள் வாங்கப்பட்டு தினமும் ஒவ்வொரு கைதியும் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வீடியோ காலில் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த வசதி முதல்முறை செய்யப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் அற்புதம்மாள் தனது ட்விட்டரில்,  “பத்து ஆண்டுகள் தண்டனை முடித்த சிறைவாசிகளை Conditional Leave முறையில் அனுப்ப கனிவுடன் ஆவன செய்யுங்கள். 24 மணிநேர கண்காணிப்பில் உள்ள சிறைகள் social distancing என்பதற்கு உகந்த இடமல்ல. அவர்களை தமது வீடுகளில் இருக்க அனுமதியுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இதே கோரிக்கையை மனுவாக மின்னஞ்சல் மூலம் தமிழக முதல்வர், சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

எம்.டி.ஆர். ஸ்ரீதர்