அழகிரி ஆதரவாளரை நீக்கிய ஸ்டாலின்!

slider அரசியல்

 

Stalin-KP-Ramalingam

 

தமிழகத்தை கொரானா ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இந் நேரத்தில் எதிர்க் கட்சியான தி.மு.க.வில் ஒரு புயல் உருவாகியுள்ளது. தி.மு.க.வின் விவசாய அணிச் செயலாளரும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரும், முன்பு மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராகவும் இருந்த கே.பி.ராமலிங்கம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் அதிரடியாக நேற்று (30.3.2020) அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி நீக்கம் தி.மு.க.வில் மீண்டும் பெரும் புகைச்சலுக்கான அறிகுறி என்பதாகவும் பேச்சு கிளம்பியுள்ளது.

கடந்த 2006-2011 ஆண்டு நடைபெற்ற தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தென்னை விவசாயிகள் நல வாரியத் தலைவராகவும், தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியிடம் நெருக்கமாகவும் இருந்த கே.பி.ராமலிங்கம் தி.மு.க.வின் மேடைகளில் அனல்தெறிக்க பேசக்கூடியவர்.  மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர். தி.மு.க. தலைமையால் அழகிரி மீதான கட்சி நடவடிக்கைகளுக்கு பிறகு ஆதரவாளர் என்பதை அடக்கி வாசித்தார். ஆனாலும் கலைஞர் உயிருடன்  இருந்தபோது ஸ்டாலினுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். கலைஞர் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தலைவரானதும், ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டு கட்சிப் பணி ஆற்றி வந்தார். இவர் மாநில விவசாய அணிச் செயலாளர் பொறுப்பிலும் தொடர்ந்தார். சமீபத்தில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக (எம்.பி.) திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர். தனக்கு எப்படியும் எம்.பி. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ராமலிங்கம் தனக்கு சீட் இல்லை என்றவுடன் மிகவும் வருத்தத்திலும் தலைமையின் மீது கோபத்திலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது கொரானா தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியிருக்கும் இவ் வேளையில், எதிர்க் கட்சித் தலைவரான ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதிக்க காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதே கோரிக்கையை தி.மு.க.வின் தோழமைக் கட்சித் தலைவர்களும் வலியுறுத்த தொடங்கினர்.

இந்த விஷயத்தில் தான் கே.பி.ராமலிங்கம்,  ‘ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வின்  தோழமைக் கட்சி தலைவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தி வருகின்றனர்.  அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லாதது. முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது’ என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார் .

கட்சியில் விவசாய அணி மாநிலச் செயலாளராகவிருக்கும் கே.பி.ராமலிங்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தலைமையை விமர்சித்துள்ளது ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களை கோபம் அடையச் செய்ததாம். இதனை முன்னிட்டு தலைவர் ஸ்டாலின் உடனடியாக  ராமலிங்கம் தொடர்பாக துரைமுருகன், டி,ஆர். பாலு ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டாராம். இதன் பின்னணியில்தான் ராமலிங்கத்தை கட்சியைவிட்டு நீக்கி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார் என்கிறது தி.மு.க. தலைமைக் கழக வட்டாரத் தகவல்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். கே.பி.ராமலிங்கமும் கொங்கு மண்டலத்தின் நாமக்கல்லைச் சேர்ந்தவர். ஆகவே, விரைவில் ராமலிங்கம் அ.தி.மு.க.வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவிருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் நோக்கர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.