பகைவருக்கும் அருள்செய்யும் கியூபா

slider உலகம் மருத்துவம்
இத்தாலிக்குச் சென்ற கியூபா மருத்துவக் குழுவினர்

 

உலக வல்லரசு அமெரிக்காவை எதிர்த்து நின்று இப்போது உலகமே ஆச்சரியப்படும் அளவில் வளர்ந்து நிற்கிற கியூபா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. அந்த நாட்டை கம்யூனிஸ்டு நாடாக உருவாக்கியவர் பிடல் காஸ்ட்ரோ. இவருக்கு இதில் முக்கிய பங்களிப்பை அளித்தவர் சேகுவாரா.

சின்னஞ் சிறிய நாடான கியூபா பொருளாதாரத்தில் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படியான நாடு இல்லை என்றாலும், அங்கு மருத்துவ படிப்பும், சுகாதாரமும் அரசால் இலவசமாக கடந்த 50 அண்டுகளுக்கு மேலாக வழங்கப்பட்டு வரப்படுகிறது. மேலும், மருத்துவ சேவையை மனிதகுலம் மொத்தத்துக்குமான சேவையாக கருதும் வழக்கமும் நீண்ட காலமாக அதனிடம் இருந்து வருகிறது. பேரிடர் காலங்களில் கொள்கை ரீதியில் எதிரி நாட்டுக்குக்கூட மருத்துவ சேவையைச் செய்வதை பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் கியூபா, இப்போது உலகமெங்கும் மனித குலம் கொரானாவால் பாதிக்கப்பட்டும், பலியாகிக் கொண்டிருக்கும் வேளையில் தன் மருத்து சேவையை இப்போதும் அளித்து வருவது உலக மக்களை வியப்புறச் செய்துள்ளது.

குறிப்பாக, இத்தாலிக்கு  தானாகவே வலிய சென்று உதவிகளை செய்ய தொடங்கியது கியூபா.  தங்கள் நாட்டைச் சேர்ந்த 50  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அந்த நாட்டுக்கு அனுப்பிவைத்தது. தங்கள் உயிருக்கும் ஆபத்து வரும் என்று தெரிந்துதான் இவர்கள் இத்தாலிய மக்களுக்கு சேவை செய்ய முன்வந்தனர். இந்த 50க்கும் மேற்பட்ட கியூபா மருத்துவர்களை விமான நிலையத்தில் பார்த்ததுமே இத்தாலியர்கள் எழுந்து நின்று வரவேற்றனர். மேலும், முற்றிலும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், கியூபா மருத்துவக் குழு தங்களுடன் இருப்பது ஆறுதலையும் நம்பிக்கையும் நிறையவே தந்து வருவதாக இத்தாலி கூறியுள்ளது.

 

இன்னும் பிரேசில், வெனிசுலா, ஜமைக்கா போன்ற நாடுகள் கியூபாவிடம், “உங்கள் மருத்துவர்களை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்களேன்” என்று வாய்விட்டு வேண்டுகோள் விடுக்க தொடங்கியுள்ளன. இவ்வளவுக்கும் முன்பு ஒருமுறை பிரேசில், “கியூபா மருத்துவர்கள் தீவிரவாதிகள்” என்று விமர்சனம் செய்திருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

அடுத்து   Cuban Interferon Alpha 2B என்ற மருந்தை கியூபா கொடுத்து உதவியதால் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என்று சீன அரசே ஒப்புக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த Cuban Interferon Alpha 2B மருந்தானது 1981 -ம் ஆண்டு முதல்முறையாக டெங்கு காய்ச்சலுக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டு டெங்குவை ஒடுக்கி பெரும் வெற்றி பெற்ற மருந்தாகும். அதுதான் சீனாவுக்கு தற்போது கொரோனாவைரஸ் நோய்க்கு எதிராக பயன்பட்டுள்ளது. தொற்று நோய்கள் முக்கியமாக, கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்துகளாக இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்கும் நான்கு மருந்துகளில் இதுவும் ஒன்றாகும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான முற்றும் முழுமையான மருந்து இது என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், எந்த மருந்துமே இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த மருந்து வினைத்திறனுடன் செயலாற்றுகிறது என்று  உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இன்னொரு சம்பவமாக, சில தினங்களுக்கு முன்பு  1,000 பேருடன் கரீபியன் பகுதியில் பயணித்து வந்த ப்ரீமர் சொகுசு கப்பலில் ஐந்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், அந்த கப்பலை எந்த நாடும் தங்கள் துறைமுகத்தில் நிறுத்தி கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் கியூபா, “நாங்க இருக்கோம்” என்று முன் வந்து அந்தக் கப்பல் கியூபாவில் நங்கூரமிட அனுமதியும் தந்தது. இந்தக் கப்பல் பிரிட்டனுடையது. இவ்வளவுக்கும் பிரிட்டனும், கியூபாவும் எதிரெதிர் துருவம். இதற்காக தற்போது  “நன்றி கியூபா! உங்களை, நாங்கள் விரும்புகிறோம்” என்று அறிவிப்பு செய்திருக்கிறத பிரிட்டன்.

கடந்த 1955 – ம் ஆண்டு கியூபா கயூனிஸ்டு நாடாக தன்னருகே உருவானதிலிருந்தே அமெரிக்கா இதுவரை கியூபாவை விரும்பாமலும், அங்கீகரிக்காமலும் பகையுடனே நடந்து வந்தபோதிலும், தற்போதைய பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அமெரிக்காவுக்கு மருத்துவ சேவை செய்திட கியூபா தயாராகவிருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா பக்கமிருந்துதான் இன்னும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதன் மூலம் எந்த பாகுபாடுமின்றி எதிரி நாடுகள் என்கிற பேதமின்றி கியூபா மருத்துவத்தில் ஆற்றிவரும் சேவைக்கு ஒட்டுமொத்த மனித குலம் மிகப்பெரும் கடன்பட்டிருக்கிறது.

தொ.ரா.ஸ்ரீ.