தடுமாறும் பிரசாந்த் கிஷோர் – தவிப்பில் தி.மு.க.!

slider அரசியல்

 

STALIN-PRASANTH-KISHORE

 

 

2011 மற்றும் 2016–ம் ஆண்டுகளில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் தோல்வி கண்டுள்ள தி.மு.க., அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் அ.தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தாக வேண்டும் என்பதற்காக, தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் முக்கியமான நடவடிக்கையாக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது நாடெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள கொரானா வைரஸ் 144 தடையுத்தரவு காரணமாக பிரசாந்த் கிஷோரின் செயல் திட்டங்கள் முடங்கியிருக்கிறது. இதனால், ஏதேனும் பின்னடைவை தந்துவிடுமோ என்கிற அச்சம் தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர் தனது அரசியல் திட்டங்களை மூன்று வகையில் செயல்படுத்துவார். முதலில் எந்த மாநிலத்தில் பணிகளை செய்கிறாரோ அந்த மாநிலத்தில் பணிக்கு புதிய ஆட்களை எடுப்பார். அதன்பின் தேர்தல் தொடர்பாக அக்கட்சியுடன் ஆலோசனை செய்து மாநிலம் முழுக்க இருக்கும் மாவட்ட செயலாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அதன்பின் தேர்தலுக்கான திட்டங்களை வகுப்பார். அவரது குழுவில் இருக்கும் களப் பணியாளர்கள் இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவார்கள்.

சமீபத்தில் தி.மு.க.வுக்கான ஆட்களை தேர்வு செய்துள்ள பிரசாந்த் கிஷோர், இன்னும் அவர்களுக்கு பணிகள் எதுவும் கொடுக்கவில்லை. மேலும், பிரஷாந்த் கிஷோர் தற்போது பீகாரில் இருக்கிறார். இன்னொரு பக்கம் இவர் தேர்வு செய்த களப் பணியாளர்கள் எல்லாம் சென்னையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் எந்தத் தொடர்பும் இல்லாமலுள்ளது.  ஊரடங்கு காரணமாக பிரஷாந்த் கிஷோர் தேர்தலுக்கான எந்தவிதமான பணிகளையும் செய்ய முடியவில்லை. முக்கியமாக தனது குழுவில் இருக்கும் களப் பணியாளர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. இதேபோல்  தி.மு.க.வின் முக்கிய தலைவர்களையும் நேரில் பார்த்து ஆலோசனையும் செய்ய முடியவில்லை.

பிரஷாந்த் கிஷோர் தன்னுடைய பணிகளை முழுமையாக செய்ய முடிக்க குறைந்தபட்சம் ஒரு வருடம் எடுத்துக் கொள்வது வழக்கம் எனும் நிலையில், தற்போதைய ஊரடங்கு காரணமாக அவருடைய பணிகளில் பெரியளவில் சுணக்கம்  ஏற்படும் என்கிறார்கள்.  இதன் காரணமாக பணிகள் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள்கூட  ஆகிவிடலாம். இதனால் மிகக் குறைந்த  கால அளவில் பிரஷாந்த் கிஷோர் எப்படி செயல்படுவார் என்கிற ஐயமும் தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  தமிழக அரசியல் நிலவரம் என்ன? மக்களின் மனநிலை என்ன என்று தெரியாமல் பிரஷாந்த் கிஷோர் குழம்பி வருகிறார் என்பதாகவும் தி.மு.க. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து, கொரானாவினால் தமிழக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் யாவும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பொதுவாக தமிழக மக்கள் உணர்வுக்கு அதிகம் முக்கியம் கொடுப்பவர்கள். இன்னும் 12 மாதங்களே அடுத்த ஆண்டு சட்டமன்றத்துக்கு உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருப்பதால், இது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரும் சாதகமாக அமையும். எனவே, பிரசாந்த் கிஷோர் என்னதான் தேர்தல் ஆலோசனைகள் வழங்கினாலும் கால அளவு குறைவாக இருப்பதால் அது தி.மு.க.வுக்கு ஒன்றும் பெரியளவில் பலனளிக்கப் போவதில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்