இங்கிலாந்தில் கொரானா!

slider உலகம் மருத்துவம்

 

PORIS-JOHNSON

 

உலகத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது கொரானா. தற்போதைய நிலவரப்படி இத்தாலியிலும், ஸ்பெயினிலும், அமெரிக்காவிலும் பலியாகிறவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், இப்போது இங்கிலாந்திலும் பாதிப்புகள் ஏற்படத் துவங்கியிருக்கிறது. குறிப்பாக, இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரானா பாதிப்பு என்கிற தகவல் உலகளவில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யு.கே. என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவற்றைக் கொண்டதாகும். பொதுவாக இங்கிலாந்து என்கிற அடைமொழியில் அழைக்கப்படுகிறது. இங்கு கொரானாவுக்கு இதுவரை 11 ஆயிரத்து 658 பேரை பாதித்துள்ளனர். 578 பேர்கள் பலியாகியுள்ளனர்.

 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது தற்போது டுவிட்டரில் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில் அவர்,  ’’கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டன. நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரியான பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனையின் பேரில் பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை நான் தனிமைப் படுத்திக்கொண்டு எனது இல்லத்தில் இருந்து கொண்டு வேலை செய்வேன். அதுதான் செய்ய வேண்டிய சரியான செயல் ஆகும். என்னால் தொடர்ந்து செயல்பட முடியும். இதற்காக நவீன தொழில் நுட்பத்துக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். தேசிய அளவில் கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் நான் எனது குழுவை வழிநடத்துகிற வகையில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து அரசு செய்திதொடர்பாளர் கூறுகையில், “எண்.10, டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை தேசிய சுகாதார பணி ஊழியர்கள் மேற்கொண்டனர். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதியானது. பிரதமர், தனது இல்லத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக போராட காணொலி காட்சி வழியான சந்திப்புகள் மூலம் அரசின் செயல்பாடுகளை அவர் தொடர்ந்து தலைமை தாங்கி நடத்திச்செல்வார்” எனக் கூறியுள்ளார்.

அடுத்து பிரதமர் இல்ல செய்தி தொடர்பாளர் கூறுகையில், “பிரதமருக்கான உணவுகள், வேலை செய்வதற்கான ஆவணங்கள் அவரது அறையின் கதவுக்கு அருகே வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கர்ப்பமாகவுள்ள போரிஸ் ஜான்சனின் வருங்கால காதல் மனைவி கேரி சைமண்ட்ஸ் எங்கோ ஒரு இடத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைசியாக கடந்த 11- ம் தேதி சந்தித்துள்ளார். இப்போது கொரானா தடுப்பு நடவடிக்கைகளை ஆலோசனைகளை பின்பற்றி ராணி இரண்டாம் எலிசபெத் நலமாகவுள்ளார் என்று இங்கிலாந்து அரண்மனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் சுகாதார மந்திரி மேத் ஹான்காக்குக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அலுவல்களை தொடர்கிறார் என்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில்  “அன்பிற்குரிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நீங்கள் ஒரு போராளி. இந்த சவாலையும் நீங்கள் கடந்து வருவீர்கள். உங்கள் ஆரோக்கியத்துக்காகவும், ஆரோக்கியமான இங்கிலாந்தை உறுதி செய்வதற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தான் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள முதல்  அரசாங்க மற்றும் உலக தலைவர்.    மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபிக்கும் கொரோனா வைரஸ் பாதித்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • தொ.ரா.ஸ்ரீ.