கறமிறங்கும் இந்திய ராணுவம்!

slider அரசியல் மருத்துவம்

 

உலகமெங்கும் கொரானா வைரஸ் ஏற்படுத்தியுள்ள  பயங்கரம் மற்றும் பீதியை விரட்டவும், மக்களுக்கு  உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ராணுவத்தை களமிறக்க மத்திய அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது.  பிரதமர் நரேந்திர மோடி இதுவரை இரண்டு முறை நாட்டு மக்களிடம் உரையாடி நிலைமையின் தீவிரத்தை விளக்கியுள்ளார்.  இதன் அடுத்தகட்டமாக நேற்று (26.3.2020)  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் முப்படை தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விமானப்படை தளபதி படோரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங், ராணுவ தளபதி நரவானே கலந்து கொண்டனர். இவர்களுடன் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பாதுகாப்பு செயலர் அஜய் குமார் ஆகியோர்  பங்கேற்றனர்.

இதுபற்றி ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தற்போது நாட்டை சூழ்ந்துள்ள கொரோனா அபாயத்தை எதிர்கொள்ள ராணுவமும் களமிறங்கும் நேரம் வந்துவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்துவதுதான் மிக முக்கியபணியாக உள்ளது. அதற்கான உள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். குறிப்பாக புயல்வேகத்தில் மருத்துவமனைகளை உருவாக்குதல்.  ராணுவத்தில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோரை களத்தில் இறக்குதல். மேலும்,  மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். நாட்டின் எந்த மூலைக்கும் விரைந்து சென்று கொரோனா நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளுடன் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். மத்திய அரசிடமிருந்து எந்த நேரத்திலும் ராணுவத்திற்கான தேவை குறித்து கோரிக்கை வரலாம் என்பதால் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் கேட்டுக் கொண்டார்’’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. பிரதமர் மோடி இந்த விஷயத்தில் ஆரம்பத்திலே மக்கள் சுய ஊரடங்கை அமல்படுத்தினார். மேலும், கொரானா நோயின் தீவிரத்தை உணர்ந்து 21 நாட்கள் 144 உத்தரவும் அமல்படுத்தியுள்ளார். அதேநேரத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்கவும் அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரானா பிடியிலிருந்து மக்களை காக்க ராணுவத்தையும் களமிறக்க மத்திய அரசு தயாராகியுள்ளது. ராணுவத்தின் நிவாரணப் பணி இன்றைய காலக்கட்டத்தில் பெரிதும் தேவைப்படுகிறது. குறிப்பாக, கிருமி நாசினி விநியோகம் ராணுவத்தால் மட்டுமே திறம்பட செய்யமுடியும். மேலை நாடுகளிமும் இந்தப் பணியில் ராணுவம் தான் களம் இறக்கப்படுகிறது. மேலும், அவசர நிலைமைகளை மருத்துவம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ராணுவத்தின் சேவை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைப்படுகிறது. அடுத்து இந்தமாதிரியான சமயத்தில் ராணுவம் வீதியில் வந்தால் மக்களுக்கு தெம்பும் துணிச்சலும் ஏற்படும் என்பதையும் முக்கிய குறிப்பிட வேண்டும்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்