உலக சுகாதார நிறுவனம் மீது கோபத்தில் அமெரிக்கா!

slider உலகம்
TRUMP

 

உலகளவில் கொரானாவினால் பலியாவோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னணி வகிக்கிறது. சொல்லப் போனால் எப்படி கொரானாவிலிருந்து அமெரிக்க மக்களை காப்பாற்றுவது என்று தெரியாமல் அமெரிக்க அரசு தவித்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா இதுபோன்ற ஒரு தவிப்பை அடைவது இதுவே முதல்முறை என்றுகூட சொல்லலாம். இதன் பின்னணியில் அமெரிக்க எம்.பி.க்களில் சிலரும், அமெரிக்க அதிபர் டிரம்பும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர். இது உலகளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில்  அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி எம்.பி. மார்கோ ரூபியோ, உலக சுகாதார நிறுவனமான ‘ஹூ’ மீது அதிரடியாக புகார் ஒன்றை தற்போது கூறியுள்ளார். அவர், ’’கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது’’ என்று குற்றம் சுமத்தியுள்ளார். அடுத்ததாக,  இதேபோன்ற குற்றச்சாட்டை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் உறுப்பினரும், அதன் வெளியுறவு குழு மூத்த உறுப்பினருமான மைக்கேல் மெக்காலும் கூறியுள்ளார்.

இதனையடுத்து வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் (25.3.2020) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டிரம்பிடம் , “கொரோனா வைரஸ் பிரச்சினையில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு மிகவும் சாதகமாக நடந்து கொள்கிறது என்று செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோவும், பிரதிநிதித்துவ சபை எம்.பி. மைக்கேல் மெக்காலும் புகார்கூறி உள்ளனரே, இந்த கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று  கேள்வி எழுப்பினர்.

இதற்கு டிரம்ப், “உலக சுகாதார நிறுவனம் சீனாவின் பக்கம் மிகவும் சாய்ந்து விட்டது. இதில் ஏராளமான மக்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மிகவும் நியாயமற்று நடந்து கொள்கிறது என்ற பேச்சு பரவலாக எழுந்து இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் நியாயமுடன் நடந்து கொள்ளவில்லை என்று ஏராளமானோர் உணர்கிறார்கள்’’ என்று பதில் அளித்துள்ளார்.

குறிப்பாக,  கிரேக் ஸ்டியூப் என்ற அமெரிக்க எம்.பி., “உலக சுகாதார நிறுவனம் சீனாவின் ஊது குழலாகவே மாறி விட்டது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இதற்கான விளைவுகளை சந்தித்தாக வேண்டும்” என்று கடுமையான முறையில் கூறியிருக்கிறார்.

அடுத்து இன்னொரு அமெரிக்க எம்.பி.யான ஜோஷ் ஹாலேயும், கிரேக் ஸ்டியூப் குரலை எதிரொலித்துள்ளார். அவர் கூறுகையில் “இந்த தொற்று பரவி வருகிற கால கட்டத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாகவும், உலகத்துக்கு எதிராகவும் உலக சுகாதார நிறுவனம் சாய்ந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனரான கெப்ரேய்சஸ் கடந்த ஜனவரி மாதம் சீனா சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச மருத்துவ வல்லுனர்கள் குழுவும் சீனா சென்றது. இதற்கு முந்திய முப்பது நாள்களுக்கு முந்திதான் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரானா தன் ஆட்டத்தை ஆரம்பித்தது என்பதும் கவனிக்கத்தக்கது. சீன அதிபரின் சந்திப்புக்கு பின்னர் கெப்ரேய்சஸ் பேசுகையில், “புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உருவானபோது அதை முடிவுக்கு கொண்டு வருவதில் சீன தலைமை உறுதியுடன் செயல்பட்டது’’ என்று குறிப்பிட்டிருந்தார். இவர் கூறிய இந்தக் கருத்துதான் இப்போது அமெரிக்காவில் பெருத்த கோபமாக வெடித்து வருகிறது. கொரானா வைரஸ் பாதிப்பு முடிவுக்குப் பிறகு இந்த காரியத்திற்காக உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் பதில் சொல்ல வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பதை வைத்து கவனிக்கையில் இந்த விவகாரத்தில் உலகளவில் பெரும் மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுனர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.