மோடியை பாராட்டிய ப.சிதம்பரம்!

slider அரசியல்
P-CHIDAMBARAM

 

கடந்தமுறை மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்தே அதனை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் முக்கியமானவராக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு வழக்கில் கைதாகி திகார் சிறையில் கிட்டதட்ட 100 நாள்கள் இருந்துள்ளார். அப்போது ப.சிதம்பரம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தன்னை பழிவாங்குவதாக குற்றம் சுமத்தினார். இப்படிப்பட்ட ப.சிதம்பரம் இப்போது கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு ‘பிரதமர் மோடியை  ‘படைத் தலைவர்’ என்றும், ‘மக்கள் அவரின் படை வீரர்கள்’ என்றும் பாராட்டியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சாக உருவெடுத்துள்ளது.

சில வாரங்களாகவே ப.சிதம்பரம் கொரானா வைரஸிலிருந்து நாட்டையும், மக்களையும் காக்க மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உள்ளிட்ட மிகப்பெரிய முடிவை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  பிரதமர் மோடி 21- நாளுக்கு ஊரடங்கு உத்தரவு என்று அறிவித்தவுடன் ப.சிதம்பரம்  ட்விட்டர் வாயிலாக மோடிக்குப் பாராட்டு தெரிவித்து ஓர் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  ”கொரானா வைரஸுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தது வரலாற்றுத் திருப்புமுனையான முடிவு. இந்த நேரத்தில் நாம் இதற்கு முன் செய்த விவாதங்களை, விமர்சனங்களைப் பின்னுக்குத் தள்ளிவைக்க வேண்டும். கொரானாவுக்கு எதிரான போரில் நாமெல்லாம் படை வீரர்களாக இருப்போம். மோடி படைத் தலைவராகச் செயல்படுவார். பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமையாகும். கொரானா வைரஸின் தாக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தைச் சிக்கலில் இருந்து மீட்க 10 வகையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். இதை அரசு பரீசலனைக்கு எடுத்துக்கொண்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இன்றைய சூழலில் ஏழை மக்கள் கையில் உடனடியாகப் பணத்தை வழங்க வேண்டியது அவசியமாகும்.  ஏழைகள், விளிம்பு நிலை மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோரின் வங்கிக் கணக்கில் உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும். அனைத்து வகையான பொருட்கள், சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்துள்ளாகக் கொண்டுவந்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நுகர்வை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்திருக்கிறார் சிதம்பரம்.

 1.   முதலாவதாக இப்போதுள்ள வேலை வாய்ப்பையும், ஊதியத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஏழை மக்கள், விளிம்பு நிலை சமூகத்து மக்களின் கைகளில் பணம் புழங்க வேண்டும்.
 2. பிரதமர் விவசாயிகள் (கிசான்திட்டம்) திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதை இரு மடங்காக்கி ரூ.12 ஆயிரத்தை விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
 3. கிசான் திட்டத்தில் இல்லாத விவசாயிகளை், அதாவது குத்தகை நிலத்தில் உழும் விவசாயிகளையும் இதில் இணைக்கக் கோரி மாநில அரசுகளிடம் கூற வேண்டும். அவர்களுக்கும் இரு தவணைகளாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.
 4. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைத்து பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கில் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும்.
 5. நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். அதோடு ரூ.10 கிலோ அரிசி அல்லது கோதுமையை அடுத்த 21 நாட்களுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கும் வழங்கிட வேண்டும்.
 6. பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களையும், அவர்களின் ஊதியத்தையும் குறைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 7. ஒவ்வொரு வார்டு வாரியாக, மண்டல் வாரியாக பதிவேட்டை உருவாக்கி வங்கிக் கணக்கில் பணம் பெறாதவர்களை அழைத்து அவர்களுக்குப் பணம் வழங்கிட வேண்டும். இந்தத் திட்டத்தில் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களுக்கும் பணம் வழங்கிட வேண்டும்.
 8. குறைந்தபட்ச விசாரணையுடன், ஆவணங்களுடன் அனைவருக்கும் வங்கிக் கணக்கு உருவாக்கி, அதில் ஆதார் அடிப்படையில், ஒவ்வொரு கணக்குதாரருக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும்.
 9. அனைத்து விதமான வரிகளையும் காலதாமதமாகச் செலுத்தலாம். ஜூன் 30-ம் தேதி வரை வரிகளைச் செலுத்த அவகாசம் வழங்கலாம்.
 10. பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகியவற்றுக்கு அவர்கள் பெறும் வரி வருவாய் அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்கலாம். வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ள கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கலாம்.

இந்தத் திட்டங்கள், ஆலோசனைகள் அனைத்தும் தற்போதுள்ள சூழலுக்கானவை. மக்கள் கைகளில் குறிப்பாக,  ஏழை மக்கள் கைகளில் அதிகமான பணம் புழங்கும்போது பொருளாதாரம் மேல் எழும்பும். வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கும் மக்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதுதான் உடனடி சவால். அடுத்தடுத்த நாட்களில் அடுத்துவரும் சவால்களை அடையாளம் காண்போம்.

மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே இருங்கள். ‘ஸ்டே ஹோம்’ இந்தியா என்ற வாசகம் மிகப்பெரிய பேரணியாகும்”    என்று சிதம்பரம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். பிரதமர் மோடியைப் பாராட்டி ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து, அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

 • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்