தமிழகத்துக்கு நம்பிக்கையூட்டிய கொரானா தகவல்!

slider அரசியல்
CORONA

 

தமிழகத்தில் இன்றைய  (26.3.2020) நிலவரப்படி 23 நபர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 616 என்று புள்ளிவிபரக் கணக்கு சொல்கிறது. தமிழகத்தில் இரண்டு நபர்கள் கொரானா பிடியிலிருந்து முழுமையாக குணமாகியுள்ளார்கள் என்கிற செய்தி தமிழகத்திலுள்ள அனைவருக்கும் அச்சத்தை போக்குவதாகவும், மிகுந்த தைரியத்தை அளிப்பதாகவும் உள்ளது.

காஞ்சிபுரத்துக்கு அடுத்து இரண்டாவதாக டில்லியிலிருந்து வந்த கொரானா நோயளியும் இப்போது குணமடைந்துள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அரசு தரப்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தனது டுவிட்டரில்,  “மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கள் உடல் நலனை காத்துக் கொள்வது தலையாய கடமை. தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் முக கவசங்கள் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் முக கவசம் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அவை தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையில் அரசு மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட தனியார் மருத்துவமனைகள் உறுதியளித்துள்ளன. இது குறித்து தனியார் மருத்துவமனையுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். கொரானா பாதிக்கப்பட்ட அனைவரின் உடல் நலம் சீராக உள்ளது.

மேலும், உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நேயாளிகளுக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.    டில்லியிலிருந்து இருந்து சென்னை வந்த நபர் கொரானா பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது பூரண நலமடைந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட இரண்டுகட்ட பரிசோதனையில் கொரானா நோய் முற்றிலும் குணமடைந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் இரண்டு நாளில் வீடு திரும்புவார். மேலும் காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் ஒருவரும் கொரானா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்துள்ளார் ’’ என்று  பதிவிட்டுள்ளார்.

 

தற்போது இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொது மக்கள் வெளியில் வந்தால் போதும். மற்றபடி வீடுகளில் இருங்கள். அதிலும் தனித்திருங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழக மக்களிடையே 144 மற்றும் ஊரடங்கு காலங்கள் குறித்த அனுபவங்கள் பெரியளவில் இருந்ததில்லை என்பதால், அவர்களிடம் பெரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்குள் மன அழுத்தமாக உருவாக வாய்ப்புண்டு. இப்படியான நிலைமையில் தமிழகளவில் 23 கொரானா நோயாளிகளில் இரண்டு உயிரிழப்பைத் தவிர இருவர் குணமாகி வீடு திரும்பவுள்ள தகவல் என்பது அவர்களுக்கு மிகுந்த தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்பது உறுதி.

  • தொ.ரா.ஸ்ரீ.