களமிறங்கிய தனியார் நிறுவனம்

slider அரசியல் மருத்துவம்
Anand Mahindra

 

உலகமே கொரானா வைரஸ் தொற்றுநோய் கோரப்படியில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறது. ஒவ்வொரு நாடும், அரசும் தங்கள் மக்களை காப்பற்ற பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்திய அரசும் முதலில்  ‘மக்கள் சுய ஊரடங்கு’ என்று துவங்கி இன்று முதல் 144 தடையுத்தரவை நாடு முழவதும் அமல்படுத்தியுள்ளது. மேலும், பொருளாதாரத்தில் அடித்தட்டு நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு நிதியுதவி வழங்க பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனியார் ஒத்துழைப்பும் இந்த விஷயத்தில் தேவை. இதன் முதல் தொடக்கமாக மஹிந்திரா நிறுவனம் நாட்டுக்கும் மக்களுக்கும் தனது சேவையை தொடங்கியுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா நிறுவனம். இது டிராக்டர் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. இந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா. இவர் தற்போது கொரானா பாதிப்பு குறித்து பேசியுள்ளார். இது குறித்து ஆனந்த மஹிந்திரா தனது ட்வீட்டரில், “இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மற்றும் நோய்த் தொற்று நிபுணர்களின் பல அறிக்கைகளை படித்தேன். இந்த கொரோனா நோய்த் தொற்று கிட்டத்தட்ட இந்தியாவில்  ‘ஸ்டேஜ் 3-ல்’ இருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். இது இந்திய மருத்துவ உள்கட்டமைப்பின் மீது பெரிய அழுத்தத்தை ஏற்படுத்து இருக்கிறது. அடுத்த சில வாரங்களுக்கு லாக் டவுன் செய்வதால், நோய் தொற்று குறையலாம், மருத்துவத் துறை மீதான அழுத்தம் கொஞ்சம் குறையலாம். இருப்பினும், நாம் தற்காலிகமாக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும். அதோடு நமக்கு வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடும் இருக்கிறது. இந்த எதிர்பாராத நோய்க்கு பதில் அளிக்கும் விதத்தில், மஹிந்திரா குழுமம், தன் உற்பத்தி ஆலைகளில் வெண்டிலேட்டர்களை தயாரிப்பது எப்படி..? என உடனடியாக வேலையில் இறங்க இருக்கிறோம். அதோடு மஹிந்திரா ஹாலிடேஸ் ரிசார்ட்களை, தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.

மேலும், தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க, எங்கள் திட்டக் குழுவினர்கள், இந்திய அரசு மற்றும் இந்திய ராணுவத்துக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். எங்கள் மஹிந்திரா ஃபவுண்டேஷன் ஒரு நிதியை உருவாக்கி, எங்கள் சப்ளை செயினில் அதிகம் அடி வாங்கி இருக்கும் சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு உதவ இருக்கிறோம். மஹிந்திரா ஃபவுண்டேஷனின் நிதியில் தொண்டர்கள் தங்கள் பங்களிப்பையும் கொடுக்கலாம். மேலே சொன்ன நிதிக்கு நான் என் 100 சதவிகித சம்பளத்தைக் கொடுப்பேன். வரும் மாதங்களில் இன்னும் நிறைய கொடுக்க இருக்கிறேன், மற்றவர்களும் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

வசதி படைத்தவர்கள் இந்த சமயத்தில் செய்ய வேண்டிய முதல் கடமையை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் தொடங்கி வைத்துள்ளார். இதுபோல் பலரும் முன்வர வேண்டிய நேரமிது. இந்தியர்களிடம் எப்போதும் உதவும் குணம் உண்டு. இந்த நடவடிக்கை தொடரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த உதவியும் கொரானாவை விரட்ட நமக்கு பெரும் பலமாக அமையும்.

  • தொ.ரா.ஸ்ரீ.