நெருக்கடியான நேரத்தில் ரிசர்வ் வங்கியின் அசத்தல் நடவடிக்கை!

slider அரசியல் வணிகம்

 

Reserve-Bank-of-india      

இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் பொருளாதார விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் பணி அதி முக்கியமானது. குறிப்பாக, இந்தியாவில் இயங்கிவரும் வங்கி சேவைகள் முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது. தற்போது கொரானா எனும் கொடிய நோய் உலகத்தை நடுநடுங்க செய்து வருகிறது. இதற்கு இந்தியாவும் தப்பவில்லை. கடந்த 22-ம் தேதி மக்கள் ஊரடங்கை இந்திய பிரதமர் அறிவித்தார். இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி தனிமைப்பட்டனர். இந்த கொரானாவுக்கு தனிமைப்படுதல் அவசியம். அதேநேரத்தில் மக்கள் அத்தியாவசிய வாழ்க்கைக்கு வங்கியின் சேவை அவசியமானது. இது முடக்கப்பட்டால் மக்கள் தவித்து போய்விடுவர். குறிப்பாக, ஏ.டி.எம். சேவை நெருக்கடியான நேரத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுக்க பெரிதும் கைகொடுக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி நிர்வாகம் தற்போது சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ரிசர்வ வங்கி உயர் அதிகாரி ஒருவர்  கூறியது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர்,  “நெருக்கடி நேரத்தில், நிதி சார் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கி எப்போதும் மாற்றுத் திட்டத்தை தயாராக வைத்திருக்கும். தற்போது கொரோனாவால் மக்கள் ஊரடங்குக்கு தயாராகி வருகின்றனர். இதையடுத்து மின்னணு முறையில் வங்கிப் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறும். அப்போது ‘சர்வர்’ தடையின்றி இயங்கி 24 மணி நேரமும் பணப் பட்டுவாடா மேற்கொள்ள வசதியாக  அவசர கால மாற்று திட்டத்தை ரிசர்வ் வங்கி  கடந்த 19 -ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.  பிரபல ஓட்டல் ஒன்றில்  ரிசர்வ் வங்கியின் மிக முக்கிய பொறுப்புகளிலுள்ள 37 அதிகாரிகள் உள்ளிட்ட 150 பேர் நிதிச் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கான பணிகளில் ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் உணவு தயாரிப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஓட்டல் ஊழியர்கள் 69 பேர் பணியாற்றி வருகின்றனர். வங்கி ஊழியர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.   குறிப்பிட்ட அளவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகள், கடன் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். இன்னும் சில பேர்  ‘டேட்டா’ எனப்படும் தகவல்களை பாதுகாத்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சாராத பணிகளுக்கு மூன்றாம் நபர் சேவை நிறுவனங்களைச் சேர்ந்த 600 பேர் தனியாக தகவல் மையங்களில் செயல்பட்டு வருகின்றனர். ரிசர்வ் வங்கியில் 14ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களில், மூத்த நிர்வாகிகள் தவிர்த்து பிற ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் வங்கி சேவையை நிர்வகித்து வரும் அரசு  அமைப்பான ரிசர்வ் வங்கி, நெருக்கடியால் மக்கள் தத்தளிக்கும் இந்த நேரத்தில் மக்கள்பால் மிகுந்த அக்கறை எடுத்து அவர்களின் சேமிப்பு பணம் வங்கியிலிருந்து எந்தநேரம் தேவைப்பட்டாலும் கிடைக்க செய்யும் வழிகளில் இறங்கியிருப்பதாக வெளியாகும் செய்திகள் இந்தியர் அனைவருக்கும் இந்த துயரமான வேளையில் தெம்பளிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

  • தொ.ரா.ஸ்ரீ.