ஜெயலலிதா பாணியில் அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை

slider அரசியல்
OPS EPS

 

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராகவுள்ளார். இவரது அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. இவர் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும் அ.தி.மு.க. பதவியில் இருந்து வந்தார். இந்த மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நேற்று ( 22.3.2020)  அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமையால் நீக்கப்பட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மறைவுக்குப் பிறகு, அவர் நியமித்த மாவட்டச் செயலாளரை முதல் தடவையாக அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை நீக்கியுள்ளது. இது அ.தி.மு.க.விலும் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அமைச்சராக இருந்த மணிகண்டன் நீக்கப்பட்டது தான் இரட்டைத் தலைமையால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவாக இருந்தது. ஆனால், கட்சியளவில் மாவட்டச் செயலாளர் பதவி இதுவரை பறிக்கப்பட்டது இல்லை. இப்போது தான்  முதன்முறையாக அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்துவந்த ராஜேந்திர பாலாஜியிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் பொதுத் தேர்தலில் சசிகலாவின் சிபாரிசில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.வாக்கப்பட்டு அமைச்சராகவும் ஆனவர் ராஜேந்திர பாலாஜி. இதுமட்டுமல்லாமல் மாவட்டச் செயலாளர் பதவியையும் கூடவே பரிசாக கொடுத்தார் ஜெயலலிதா. அன்றிருந்து சுமார் 10 ஆண்டுகாலம் விருதுநகர் மாவட்டச் செயலாளராக இருந்துவந்த ராஜேந்திரபாலாஜியின் கட்சி பதவி இப்போது பறிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் இப்போதைய இரட்டைத் தலைமையர்களான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகிய இருவரும், அ.தி.மு.க.வின் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அரசியல் மற்றும் பொது விஷயங்களில் கருத்து தெரிவிப்பதற்கு சில கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டே விதித்தனர். ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் இரட்டைத் தலைமையின் கட்டுப்பாடுகளை கொஞ்சமும் மதிக்காமலே தொடர்ந்து பேசிவந்தார். குறிப்பாக,   நாங்குநேரி இடைத்தேர்தலின்போது தன்னை சந்திக்க வந்த இஸ்லாமியர்களிடம், ’’நீங்க தான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீர்களே! பிறகு எதற்கு என்னை பார்க்க வந்தீர்கள்’’ எனக் கேட்டு அவர்களை விரட்டியடித்தது பெரும் சர்ச்சையானது. இதுமட்டுமல்லாமல்  சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குடியுரிமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் சர்ச்சைக்குரிய மத கருத்துக்கள் கூறியிருந்தார். இது அரசுக்கும், அ.தி.மு.க. தலைமைக்கும் பெரும் தலைவலி ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை தந்து அனுப்பினார்.  ஆனால்,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழ்ககம் போலவே திரும்ப திரும்ப சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

தற்போது உலகத்தையே ’கொரோனா’ கொள்ளை நோய் ஒட்டுமொத்த மனித குலத்தையே ஆட்டிபடைத்து வருகிறது. இதில் குறிப்பிட்ட மதத்தை சம்பந்தப்படுத்தி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதிவிட்ட ட்வீட்டர்  பதிவு சில விநாடிகளில் முதல்வர் கவனத்துக்கு சென்றதாம். அதனை முன்னிட்டு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரும் உடனடியாக கலந்துபேசி, ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுப்பது என முடிவெடுத்தனராம். முதலில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது என்றுதான்  முடிவு எடுத்தார்களாம். ஆனால்,  ஒரு சில சீனியர் நிர்வாகிகள் அறிவுறுத்தல் பேரில் முதற்கட்டமாக கட்சிப் பதவியான மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை தலைமையின் இந்த அதிரடி முடிவு கட்சியில் அமைச்சர் பதவி வகிப்பவர்கள் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள். எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் என்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சி விவகாரங்களில் எப்படி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்வாரோ அப்படிதான் இனி இரட்டை தலைமையும் முடிவுகள் எடுக்கும் என்பதை அ.தி.மு.க.வினர் ராஜேந்திர பாலாஜி மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் உணர்த்து கொள்வார்கள். இதனால் கட்சி பழைய கட்டுப்பாட்டை அடையும். இது அந்த கட்சிக்கும் பெரும் பலமாகவும் அமையும் என்கிறார்கள் தமிழக அரசியல் நோக்கர்கள்.

– எம்.டி.ஆர்.ஸ்ரீதர்