மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டது சீனா – ட்ரெம்ப் கோபம்!

slider உலகம்

 

Trump

 

 

உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரானா விஷயத்தில்  சீனா செய்த தவறால், சர்வதேச நாடுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ‘உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவுக்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். இது  உலகளவில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, அதாவது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரைச் சேர்ந்த டாக்டர் லி வென்லியாங் என்பவர் கொரோனா குறித்து சீன அரசுக்கு எச்சரிக்கையாக தகவல் அளித்திருந்தார். அவரது எச்சரிக்கையை சீன அரசு முதலில் பொருட்படுத்தவில்லை.  மேலும், வதந்தியை பரப்புவதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தது. இதற்கடுத்த நாட்களில் வூஹான் நகரம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இதற்கு பிறகுதான் சீன அரசு முழித்தது.  இதன்பின்னர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது சீன அரசு. சில நாளிலே டாக்டர் வென்லியாங்கும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அந்த டாக்டர் எச்சரிக்கை விடுத்ததுமே சீன அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்ற கருத்தும் பேசப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் நேற்று (20.3.2020) ஒரு சிறப்பு பேட்டியளித்தார். அதில், “கொரோனா வைரஸால் 145 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த பிரச்னைக்கும் சீனாவே காரணம். கொரோனா வைரஸ் பரவியது குறித்த தகவலை முன்கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டது.  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை, குறிப்பிட்ட பகுதியிலிருந்து வெளியேறாமல் வைத்து, சிகிச்சை அளித்திருந்தால், மற்ற பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதை தடுத்திருக்க முடியும். சரியான நேரத்தில், சரியான தகவலை உலக நாடுகளிடம் தெரிவிக்காமல் மறைத்து, சீனா மிகப் பெரிய தவறு செய்து விட்டது.

சீனாவின் இந்த தவறுக்கு  உலக நாடுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியுள்ளது.  சீனாவின் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் தான் இந்த வைரஸ் முதலில் பரவியது. அந்த நகரைச் சேர்ந்தவர்கள் மற்ற நகரங்களுக்கு வெளியேறுவதை தடுத்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இது கொடூரமான கொள்ளை நோய் எனத் தெரிந்திருந்தும்  அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாதது மட்டுமில்லாமல் அதுபற்றி உண்மை தகவலை தெரிவிக்காமல் மறைத்து விட்டனர். இதற்காக, சீனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து, எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது’’ என்று அந்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, மேலும்
14299 பேர்  கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனாலும், தொழில்நுட்ப துறையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

கொரானாவுக்கு அமெரிக்காவில் எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது என்பது பற்றி நேற்று அமெரிக்க அதிபர் பேசியுள்ளார். இதுபற்றி  டிரம்ப் கூறுகையில், ‘’கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சில மருந்துகளை, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் பரிந்துரை செய்துள்ளது. இதில், மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ‘க்ளோரோகுவின்’ மருந்தும் அடக்கம். அதிர்ஷ்டவசமாக இந்த மருந்து நன்றாக வேலை செய்வதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அமெரிக்கா முழுவதும் இந்த மருந்து, தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகவே இந்த மருந்தை மலேரியா காய்ச்சலுக்கு அமெரிக்க டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனாவுக்கும் இது பயன்படுவது மகிழ்ச்சியான விஷயம்’’ என்று டிரம்ப்  கூறியுள்ளார்.

 

நிமலன்