கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் தி.மு.க.!

slider அரசியல்

 

Stalin-Edapadi

 

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கும், அக் கட்சி தொடர்ந்து இரண்டாம் முறையாக தமிழகத்தில் ஆட்சியமைக்கவும் பெரும் தூணாக அமைந்தது கொங்கு மண்டலம். இங்கு 61 இடங்களை அ.தி.மு.க. அள்ளியது. தி.மு.க. வெறும் 13 இடங்களை மட்டுமே பெற்றது. எனவே, 2021 தேர்தலில் கொங்கு மண்டலத்தை மிக கவனத்தோடு கையாண்டு, அங்கு அதிக இடங்களைப் பெறுவதற்கு தயாராகி வருகிறது தி.மு.க. தலைமை. இதற்காக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் டீமும் கொங்கு மண்டலத்தில் களம் இறக்கிவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை எதிர்கொண்டு முறியடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தமுறை கொங்கு மண்டலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. போட்டி என்பது மிகக் கடுமையாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டது. பொதுவாக கொங்கு மண்டலத்தில் வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கின்றனர்.  இங்கு எம்.ஜி.ஆருக்கு என்று தனி செல்வாக்கு இன்றும் இருந்து வருகிறது. இதனால், இங்கு அ.தி.மு.க. அதிகளவில் வெற்றி பெறுவது எளிதில் சாத்தியமாகிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகும் கொங்கு மண்டலத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாகவே வைத்திருந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதன் காரணமாகவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் இருந்து  61 அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்கள்.. இதுதான் அ.தி.மு.க. இரண்டாவது முறையும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாகவும் அமைந்தது.

தற்போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவுள்ளார். முக்கிய துறைகளின் அமைச்சர்களான செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணியும் இதே மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனாலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழைய செல்வாக்கு அங்கு இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது. அதேசயம் தி.மு.க. அந்த செல்வாக்கை பெரியளவில் தன் பக்கம் இழுத்துக் கொள்ளவும் இல்லை.  இதற்கு சிறந்த உதாரணம்,  சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல். இந்த மண்டலத்தில்  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க.வுக்கு 456 இடங்கள் கிடைத்தன.  தி.மு.க.வுக்கு 446 இடங்கள் கிடைத்துள்ளன. இதுவே தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றிதான். எப்படியென்றால், 10 இடங்கள்தான் அ.தி.மு.க.வை விட குறைவாக பெற்றுள்ளது தி.மு.க..   திண்டுக்கல், நாமக்கல்லில் தி.மு.க. கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளது. இதையெல்லாம் கணக்கிட்டே தி.மு.க. தலைமை கொங்கு மண்டலத்துக்கென்று தனி டீமே போட்டுள்ளதாம். குறிப்பாக, பிரசாந்த் கிஷோர் டீமூக்கு இதற்கான வேலை இன்னும் கொடுக்கப் படவில்லையென்றாலும் விரைவில் அவர்களும் களத்தில் இறக்கப்படுவார்கள் என்று தி.மு.க. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தி.மு.க. ஒருசில விஷயங்களில் இப்போதே காய்நகர்த்தியும் உள்ளது. அது என்னவென்றால், கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கவுண்டர்கள், அருந்ததியர்கள், நாயுடு சமூகத்தினர்  பரவலாக வசித்து வருகின்றனர். சமீபத்தில் பதவியேற்ற தி.மு.க.வின் மூன்று ராஜ்ய சபா உறுப்பினர்களில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜும் ஒருவர்.  இதுவும்கூட கொங்கு மண்டலத்தை தனி கவனம் செலுத்தி தி.மு.க. தலைமை மேற்கொண்ட நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

தி.மு.க. தலைமை சாதி கணக்கு உட்பட பல்வேறு தீவிர முயற்சிகளில் இறங்கினாலும் முதல்வர் இந்த கொங்கு மண்டலத்துக்கென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துள்ளார். தொடர்ச்சியாக செய்தும் வருகிறார். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் முதல்வருக்கு தனி மரியாதை இருப்பதையும் மறுக்க முடியாது. இன்னும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் தன் சொந்த மண்டலத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக தக்க வைக்க பல அதிரடிகளையும் எடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் நோக்கர்கள்.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்