ரஜினி பக்கம் போகிறார் செந்தில் பாலாஜி?

slider அரசியல்
Rajini-Senthil-Balaji

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சிக்கு தி.மு.க. மற்றும்  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் தாவிட இருப்பதாக ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும்,   ரஜினிகாந்தின் ரகசிய உத்தரவின்பேரில்  அ.தி.மு.க.வில் சில நிர்வாகிகளையும், தி.மு.க.வில் சில நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர சொன்னதாகவும், அதற்கான வேலைகளை வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபடுவதால் தி.மு.க. வட்டாரத்தில்  ஏற்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் தொடர்பான திட்டத்தை அறிவித்து ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. தன்னுடைய அரசியல் அறிவிப்பு பெரிய அளவில் பூகம்பத்தை ஏற்படுத்தும் என்று ரஜினிகாந்த் நினைத்திருந்தார். ஆனால், அதற்குள் கொரோனா வந்துவிட்டது.  ரஜினிகாந்தின் கடைசிப் பேச்சில், ‘எனக்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம், நாம் ஆட்சிக்கு வந்தால் நான் முதல்வர் கிடையாது. வேறு ஒரு நபர்தான் முதல்வராக இருப்பார். நான் கட்சிக்கு மட்டும் தலைவராக இருப்பேன்’ என்று கூறியவர் இன்னொரு முக்கிய விஷயமாக,  “தமிழகத்தில் பெரிய கட்சிகள் தி.மு.க., அ.தி.மு.க.  அவர்களிடம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கட்சி பதவிகள் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர்கள் உழைப்பார்கள். தேர்தலுக்கு பின் கட்சியில் இருக்கும் யாரும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். அங்கு பலருக்கும் பதவிகள் கிடைப்பது இல்லை. அவர்களால் கட்சியில் வளர முடியவில்லை.  அவர்களை நாம் கட்சிக்குள் இழுக்க வேண்டும். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் இருக்கும் திறமையான நபர்களுக்கு நம் கட்சியில் அழைப்பு விடுத்து வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பேச்சின் பின்னணியில் ரகசியமாக சில வேலைகள் அரங்கேறி வருகிறதாம். இதில் முதல்கட்டமாக,  தி.மு.க.வில் சில தலைகளுக்கு குறி வைத்துள்ளனராம். அதில் முக்கியப் புள்ளியாக செந்தில் பாலாஜியை சொல்கிறார்கள்.  இதற்கு காரணம் இருக்கிறது.  கரூர் தி.மு.க.வில் தற்போது நிறைய பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கிறது. அங்கு முன்னாள் தி.மு.க. மாவட்டச் செயலாளருக்கும், அ.ம.மு.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரின் தொண்டர்களுக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை மடை மாற்றி ரஜினி பக்கம் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரமாகி வருகிறதாம்.

சமீபத்தில்கூட ஒரு வருமான வரி சோதனைக்குள்ளானார் செந்தில் பாலாஜி. இன்னும் கூட அவரால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. கட்சிப் பணிகளையும் கூட அவரால் பார்க்க முடியவில்லை. இந்த வருமான வரி ரெய்டுஅவரை ரஜினி பக்கமாக திருப்பி விடுவதற்காகத்தான் என்றும்கூட சொல்லப்படுகிறது. ரஜினி பக்கம் வந்தால் இந்த ரெய்டு எல்லாம் வராது என்றும் வலைவிரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இவர்கள் பேச்சுக்கு மயங்கி ரஜினி பக்கம் நிச்சயம் செந்தில் பாலாஜி செல்லமாட்டார். தலைவர் ஸ்டாலினும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியுள்ளார் என்று கரூர் மாவட்ட தி.மு.க. வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் முக்கிய தலைகளை தங்கள் இழுக்க வேலைகளை நடைபெறுவதாக தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. ரஜினி என்னதான் மாற்று அரசியலை வைத்தாலும்,  ஒருவேளை அதனை நடைமுறைப்படுத்தினாலும் அவரை முழுக்க முழுக்க நம்பி அரசியல் களத்தில் முழுவீச்சில் இறங்கப்போவது அவரது ரசிகர்களும், மன்ற நிர்வாகிகளும் தான். இந்த விஷயத்தில் ரஜினிகாந்த் முழு கவனமும் தங்கள் மன்ற நிர்வாகிகளை அரசியல் அரங்கில் வெளிச்சம் போட்டு காட்டவும், தன் கொள்கை வழியில் நடக்க பயிற்றுவிப்பதாகவும் இருக்கவேண்டுமேயொழிய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.விலிருந்து சில தலைகளை தங்கள் கட்சிக்கு கொண்டுவருவதாக இருக்கக்கூடாது என்கிறார்கள் தமிழக அரசியல் விமர்சகர்கள்.

  • நிமலன்