பரபரப்பை உண்டாக்கிய ஸ்டாலின் கேள்வி!

slider அரசியல்
mkseps

 

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே கொரானா அச்சத்தில் பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்து வரும் இந்நிலையில், கொரானா முன்னிட்டு தமிழக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் குறித்து தமிழக அரசியலில் பெரும் பேச்சு விவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய சட்டமன்றத்தில் (20.3.2020)   தமிழக சட்டப்பேரவையில்  எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்  பேசும்போது,    ‘’கேரளாவை போன்று ரேஷன் பொருட்களை வீட்டிற்கே நேரில் சென்று வழங்க வேண்டும். ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறவிருக்கும்  சட்டப்பேரவை முன்கூட்டியே முடிக்கப்படுகிறதா? எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லிவிட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா? அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் முன்பு யாரும் வரவேண்டாம் என பலகை வைத்துள்ளார். அமைச்சருக்கே கொரோனா அச்சம் உள்ளபோது, நாம் ஒன்று கூடி விவாதிப்பது சரியா?’’ எனக்  கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ‘’எதிர்க்கட்சி தலைவர் பேரவையை ஒத்திவைக்க வலியுறுத்துகிறார். சட்டமன்றம் கூடினால்தான் நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். இங்குதான மக்கள் பிரச்சினையைப் பற்றி பேச முடியும். சட்டமன்றத்தில் கூடியிருந்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சட்டமன்றம் நடந்துகொண்டு இருந்தால்தான், மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும்’’ என்று பதிலளித்தார்.

முதல்வர் இப்படி பதிலளித்தவுடன் ஸ்டாலின், “சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோருவது பீதியை ஏற்படுத்த அல்ல. இந்த நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே’’ என விளக்கம் கொடுத்தார்.

இதே சட்டமன்றத்தில் மற்ற விஷயங்கள் அது அரசியலாக விஷயமாக இருந்தாலும் அல்லது வேறு தனிப்பட்ட விஷயங்களாக இருந்தாலும் ஸ்டாலின் மற்றும் முதல்வர் இடையேயான கேள்வி – பதில்கள் ஆவேசங்களாக  மாறுவது தொடர்ந்த சூழலில் கொரானா குறித்த ஸ்டாலின் கேள்வியிலும், அதற்கு முதலவர் அளித்த பதிலிலும், இதற்கு ஸ்டாலின் அளித்த விளக்கத்திலும் முதிர்ந்த அரசியல் தன்மையை இருவரும் வெளிப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் தமிழக அரசியல் நோக்கர்கள்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்