மனிதர்களை மட்டுமல்ல பங்குச் சந்தைகளையும் பதம் பார்க்கும் கொரானா!

slider வணிகம்
SENEXX RATING

 

கொரானா வைரஸ் பாதிப்பால், இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. நேற்று மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ 1,700 புள்ளிகள் சரிந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், 29 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே இறங்கியது. இதன்மூலமாக, கடந்த மூன்று நாட்களில் மட்டும், முதலீட்டாளர்கள், 15.72 லட்சம் கோடி ரூபாயை இழந்து உள்ளனர். நேற்று சென்செக்ஸ், 1,709 புள்ளிகள் குறைந்து, வர்த்தக இறுதியில், 28869.51 புள்ளிகளாக சரிந்தது.

2017ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு, மும்பை பங்குச் சந்தை 29 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே இறங்கியது நேற்றுதான். இதே போல், தேசிய பங்குச் சந்தை, ‘நிப்டி’யும், 498.25 புள்ளிகள் குறைந்து, 8468.80 புள்ளிகளில் நேற்று நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், இண்டஸ்இண்ட் பேங்க் நிறுவனத்தின் பங்குகள்தான் 23 சதவீதத்துக்கும் அதிகமான சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, பவர்கிரிட், கோட்டக் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி., பேங்க், என்.டி.பி.சி., ஆகிய நிறுவனப் பங்குகள் விலை சரிவை சந்தித்தன. ஆனால், இதற்கு நேர்மாறாக ஓ.என்.ஜி.சி., மற்றும் ஐ.டி.சி., நிறுவனப் பங்குகள், இப்பிரிவில் விலை உயர்வை சந்தித்து முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. காலையில் வணிகம் துவங்கிய நேரத்தில், துவக்கத்தில் சந்தைகள் உயர்ந்த போதும், பொருளாதார நிலை குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைவால், அந்த உயர்வை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

உலக பொருளாதார நிலையின் மந்தம், கொரோனா வைரஸ் தாக்குதல் போன்றவையே தற்போதைய நிலையில் இந்திப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை குறித்த அவற்றின் சுயமதிப்பீட்டு கணக்கை, உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதை அடுத்து, இத்துறை சார்ந்த பங்குகளும் விலை வீழ்ச்சியை சந்தித்தன.குறிப்பாக, வோடபோன் ஐடியா நிறுவனப் பங்குகள், 34.85 சதவீதம் சரிந்தன.

பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 6.14 சதவீதம் சரிந்தன. நேற்றைய வர்த்தகத்தின் இடையே யெஸ் பேங்க் பங்குகள் 49.95 சதவீதம் அதிகரித்த போதும், வர்த்தகத்தின் முடிவில், 3.67 சதவீதம் உயர்வுடன்தான் முடிந்தது. அதேநேரத்தில், யெஸ் வங்கியின் பங்குகள், கடந்த நான்கு நாட்களில் மட்டும், 142 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.