உதயசூரியன் சின்னத்தில்தான் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட வேண்டும்.  தி.மு.க. அதிரடி!

slider அரசியல்
MKSTALIN

 

தமிழகத்தில் முக்கிய எதிர்க் கட்சியாக சட்டசபையிலும், அரசியல் அரங்கிலும் தி.மு.க. இருந்து வருகிறது.   2011 –ம் ஆண்டு தொடங்கி  இரண்டுமுறை தொடர்ந்து அ.தி.மு.க.விடம் ஆட்சியை இழந்து நிற்கிற அந்தக் கட்சி எப்படியேனும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. வை வீழ்த்தி ஆட்சி அமைக்க பல்வேறு முன்னெடுப்புகளை ஒவ்வொரு நிலையிலும் செயல்படத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு துவக்கமாக தங்களுடைய கூட்டணிக் கட்சிகள் எப்படி போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்திருப்பது, தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுக்குள் பெரும் சலசலப்பை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது.

தி.மு.க.வின் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பிரஷாந்த் கிஷோர் லேட்டஸ்ட்டாக கொடுத்த ஆலோசனையின்படி, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனியாக நிற்க ஆலோசனை செய்தது. ஆனால், இப்போதைய அரசியல் சூழலில் இந்தத் திட்டத்தை தி.மு.க தலைமை கைவிட்டுவிட்டடுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம்  அ.தி.மு.க.வின் வலிமை குறித்த கணக்கெடுப்பு என்றும் சொல்லப்படுகிறது.   தற்போதைக்கு  தி.மு.க.வில் காங்கிரஸ், ம.தி.மு.க.,  இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக், கொங்கு முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்தக் கட்சிகளுக்கு என்று தனி சின்னங்களும் உள்ளன. இந்த சின்னங்களின் அடிப்படையில்தான் தி.மு.க. தற்போது புதிய முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இதன்படி தேசிய கட்சியான காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தலைமை முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் தேசிய கட்சி அதன் சின்னம் கை பிரபலம் ஆனது. ஆனால், இப்போதுள்ள சூழ்நிலைப்படி  வைகோவின் ம.தி.மு.க.,  திருமாவின் வி.சி.க. இரண்டும் புதிய சின்னத்தில்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியும். இது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி – தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது என்பதால், காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் தான் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்பதில் தி.மு.க. தலைமை உறுதியாக கடைசிவரை இருக்கப் போவதாகவும் தி.மு.க. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவை தி.மு.க. எடுக்க வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.  அது என்னவென்றால்,  அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்குமான இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும் என்றும் அதாவது இவ்விரண்டும் கட்சிக்கும் இடையில் 6-7 எம்.எல்.ஏ.க்கள் என்கிற அடிப்படையிலே மெஜாரிட்டி நிலவரம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது என்றும்  கணக்கெடுக்கப்பட்ட தேசிய அரசியல் ஊடக புள்ளி விபரத்தை அலசியே தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளின் வெற்றியைக் கணக்கிட்டிருக்கிறது என்றும், ஆகவே சின்னத்தின் மூலமாக அந்த வெற்றி சொற்ப நூலிழையில் போய்விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க முடிவெடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

தி.மு.க,வின் இந்த அதிரடி முடிவை  முக்கியமாக ம.தி.மு.க இதை ஏற்றுக்கொள்ளாது என்றும்,  விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியும் தனிச் சின்னத்தில் போட்டியிடவே ஒத்துக் கொள்ளும் என்பதாலும் இந்த விவகாரம் தி.மு.க. கூட்டணியில் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்க அதிக சாத்தியமிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்