கொரானா பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

slider அரசியல் உலகம்
TRUMP

 

உலக நாடுகளை, ‘கொரோனா’ வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், “இந்த வைரஸ் பாதிப்பு, ஆகஸ்ட் மாதம் வரை தொடரும் அபாயம் உள்ளது” என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று, உலகெங்கும், 1.87 லட்சம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை, 7,477ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பு துவங்கிய சீனாவில், அதன் தாக்கம் குறைந்து வரும் அதே நேரத்தில், உலகெங்கும் அதன் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, வளர்ந்த நாடான அமெரிக்காவில், 4,744 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அங்கு, 93 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில்  ‘கொரானா’ வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் மற்றும் பார்கள் மூடப்பட்டு உள்ளன. அனைத்து வகை கேளிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், சான் பிரான்சிஸ்கோ, சிலிகான் வேலி பகுதிகளில், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும்படி உத்தரவிடப் பட்டு உள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகள், பல மாகாணங்களில் விதிக்கப்பட்டுள்ளது.

 

உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பரிசோதனை துவங்கியுள்ளது.  கடந்த 2015-ம் ஆண்டில் இந்தியா, ஐரோப்பிய நாடான நார்வே, பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை, உலக பொருளாதார அமைப்பு உள்ளிட்டவை இணைந்து சி.இ.பி.ஐ. எனப்படும் தொற்றுநோய் முன்னெச்சரிக்கை புதிய கண்டுபிடிப்புக்கான கூட்டமைப்பு என்கிற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் நிதி உதவியுடன் அமெரிக்காவின் தேசிய மருத்துவ மையம் இந்த பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 18 – 55 வயதுடைய 45 பேருக்கு மருந்து கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அடுத்த ஆறு வாரங்களுக்கு இந்த பரிசோதனை நடைபெறும். சி.இ.பி.ஐ. அமைப்பில் தமிழகத்தின் வேலுார் கிறிஸ்தவ மருத்துவக் கல்லுாரியைச் சேர்ந்த செர்ரி ககன்தீப் காங், தகேடா மருந்து தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீவ் வெங்கய்யா, உலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரல், சவுமியா சுவாமிநாதன் ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலகளவில் பெரும் போர் நெருக்கடி போன்று உருவாகியுள்ள கொரானா வைரஸ் தாக்குதல் குறித்து நேற்று (17.3.2020) அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். அவர், “நாம் அனைவரும் இணைந்து சிறப்பாக செயல்பட்டால், இந்த வைரஸ் பரவுவதை, உயிர் பலி ஏற்படுவதை தடுக்க முடியும். இந்த வைரஸ் தாக்கம் ஜூலை, ஆகஸ்ட் வரை தொடரும் என, சிலர் கூறுகிறார்கள். என்னுடைய கணிப்பின்படி, வரும் ஆகஸ்ட் மாத இறுதியில், இந்த வைரஸின் பிடியில் இருந்து முழுமையாக வெளியேறுவோம். மற்ற நாடுகளின் அனுபவத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் வரும் வாரத்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதனால் பத்துக்கும் மேற்பட்டோர் கூடுவதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாத பயணத்தை தவிர்க்கவும். உணவு விடுதிகள், பார்களுக்கு செல்வதை தவிரிக்கவும். நாம், நம்முடைய செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நாட்டின் நலனுக்காக சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால், அவர்களிடமிருந்து, வயதானோருக்கு பரவிவிடும் அபாயம் உள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும். வைரஸ் பரவாமல் தடுக்க அரசுக்கு உதவிட வேண்டும்’’ என டிரம்ப் பேசியுள்ளார்.

 

கொரானா வைரஸ் இந்த நூற்றாண்டில் வந்துள்ள கொள்ளை நோய்களிலே அதிக ஆபத்துக் கொண்டதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெரும் தொற்று நோய் இது என்பதால், பெரும் அச்சத்தை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதனை உலகத்தில் வாழும் மனித குலம் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். இதில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிப்பது எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு விரைவாக முடிப்பது அடுத்ததாக இன்னொரு உயிர் இந்த நோயினால் மரணமடைவதை தடுக்கும் ஒன்றாக அமையும். அந்த வகையில் அமெரிக்கா இதற்கான பரிசோதனையில் இறங்கியிருப்பது என்பது எல்லோருக்கும் தெம்பும் ஆறுதலும் அளிக்கிறது.

 – தொ.ரா.ஸ்ரீ.