பா.ம.க.வுக்கு எதிராக வேல்முருகனை தயார்படுத்தும் தி.மு.க.!

slider அரசியல்

 

STALIN-VELMURUGAN

 

2011-ம் மற்றும் 2016-ம் என தொடர்ச்சியாக இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.விடம் தோல்வியைத் தழுவி, ஆட்சியை இழந்து நிற்கிறது தி.மு.க. இந்த நிலையை தொடரவிடக்கூடாது என்பதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ரொம்பவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருந்து வருகிறார்.

 

வட மாவட்டங்களில் செல்வாக்கான கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்துவரும் பா.ம.க. இப்போது ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துவருகிறது. இதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தி.மு.க. பக்கம் வைத்துக் கொண்டு சமாளிக்க ஸ்டாலின் காய்நகர்த்தி வருகிறார். ஆனால், இது எந்தளவுக்கு தி.மு.க. சட்டமன்ற பொதுத் தேர்தலில் பலனளிக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாது என்பதால் தி.மு.க. முகாம்  குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசித்து வரும் வன்னியர் சமுதாயத்தின் வாக்கு வங்கி என்பது பா.ம.கவுக்குதான் சாதகமாக இருந்து வருகிறது. இதனால் பா.ம.க. வட மாட்டங்களில் குறிப்பிடத்தக்க சட்டமன்றத் தொகுதிகளும், குறிப்பிடத்தக்க பாராளுமன்றத் தொகுதிகளும் வெற்றி – தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக நீடித்து வருகிறது. இதனால்தான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பா.ம.க.வை தங்கள் கூட்டணியில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று திட்டமிடுவதற்கு முக்கிய காரணம். தற்போதைய தமிழக ஆளும் தலைமையான அ.தி.மு.க. இந்தக் காரணத்திற்காகவே அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பா.ம.க.வுக்கு 50 தொகுதிகளுக்கும் மேல் வழங்கி வட மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிகளின் வெற்றியை உறுதிச் செய்ய தீர்மானித்து காய்ந்கர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதே காரணத்திற்காக வன்னியர்களின் ஓட்டைப் பிரித்து தி.மு.க. மற்றும் கூட்டணிகளின் வெற்றியை வட மாவட்டத்தில் உறுதிச் செய்ய வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியை ப்யன்படுத்திக் கொள்ள தி.மு.க. தலைமை முடிவெடுத்திருப்பதாக தி.மு.க. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வட மாவட்டங்களில் வேல்முருகனுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.. இதைத் தவிர பிற மாவட்டங்களிலும் ஆதரவு இருக்கிறது.. இதுபோக காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் பக்கபலமாக உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக விடுதலை சிறுத்தைகளின் நட்பு நெருக்கமாகவுள்ளது. இவை எல்லாம் சேர்ந்து தி.மு.க.வின் வெற்றிக்கு வலுச்சேர்க்கும் என்கிற கணக்கும் தி.மு.க. தலைமைக்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.

 

குறிப்பாக, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவரான வேல்முருகன் தனது கட்சிக்கு தனது சமுதாயத்தில் பரவலான ஆதரவை கொண்டுள்ளார். மேலும்,  அடிக்கடி “வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 23 பேரின் குடும்பங்களுக்கு மருத்துவர் ராமதாஸ் என்ன கொடுத்தார்? இந்த இனத்துக்காக தி.மு.க.தான் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி உள்ளது. பா.ம.க.வில் இருந்து வெளியேறிய எத்தனையோ பேர் இன்று அடையாளம் தெரியாமல் போய்விட்டனர். ஆனால், அதிலிருந்து விலகி வந்து, அவர்களை எதிர்த்து இத்தனை ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் ஒரே கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி மட்டுமே. இட ஒதுக்கீட்டில் உயிர்நீத்தவர்களின் குடும்பத்திற்கு பென்சன் வழங்கியவர் கருணாநிதிதான். வன்னிய இனத்துக்கு கருணாநிதியை தவிர வேறு யாரும் நல்லது செய்தது இல்லை…” என்று பல மேடைகளிலும் பேசி வருகிறார் வேல்முருகன். இதுவும் தங்களுக்கு சாதகமாக வன்னியர் ஓட்டுக்களை பெற்றுத்தரும் என்று தி.மு.க. தலைமை கணக்கு போட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது.

 

வட மாவட்ட அரசியல் சில நேரங்களில் சாதி கணக்குக்கு ஒத்தும் போயிருக்கிறது. பல நேரங்களில் ஒத்துப் போகாமலும் போயிருக்கிறது. இதனை களத்தில் அனுபவித்த கட்சிகள்தான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். இந்தமுறை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தென்மாவட்டத்தில் எந்தமாதிரியான ராஜதந்திர பயன்படுத்த போகின்றன என்பது குறித்து இதுவரை பெரியளவில் பேச்சுக்கள் அடிபட ஆரம்பமாகவில்லை. ஆனால், வட மாவட்டத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. – தி.மு.க. – பா.ம.க. என்பதோடு இப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் சேர்ந்துள்ளது. இந்தமுறையும் இந்த சாதி கணக்கு அ.தி.மு.க. – தி.மு.க.வுக்கு கைகொடுக்குமா? என்பது அடுத்துவரும் சட்டமன்றத் பொதுத் தேர்தலின் முடிவில் தான் தெரியவரும். அதுவரை இது பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

 – எம்.டி.ஆர்.ஸ்ரீதர்