எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போட்டியிடும் செல்வகணபதி!

slider அரசியல்

 

STALIN-EDAPPADI PALANISAMY

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி பற்றி ஆரம்பத்தில் தி.மு.க. தலைமை கொஞ்சம் அலட்சியமாக கணக்கு போட்டது. ஆனால், நாளாக நாளாக ஆட்சியையும், கட்சியையும் பலப்படுத்துவதில் கைத்தேர்ந்தவராக மாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. முன்பெல்லாம் சட்டமன்றங்களில் அவ்வளவாக அதிகம் பேசாமல் குறைவாகவே பேசிவந்த இவர் இப்போது தடாலடி பேச்சாளராக மாறிவிட்டார். தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு உடனடியாக மற்றும்  ஆவேசமாக பதிலளித்து வருகிறார் முதல்வர். இந்த மாற்றம் தி.மு.க.விற்கு பெருத்த கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இது முன்னிட்டு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வரின்   சொந்த தொகுதியிலேயே அவரைத் தோற்கடிக்க தி.மு.க. அதிரடியாக இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

கடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் மிகுந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சராக பதவியேற்றபோது ஒருவித பதற்றத்துடனும், அச்சத்துடனும் காணப்பட்ட எடப்பாடி பழனிசாமி சமீபமாக அரசியலில் புகுந்து விளையாடத் தொடங்கியுள்ளார். இந்தளவிற்கு தனது குணநலன்களை மாற்றிக்கொண்டுள்ளார் முதல்வர். குறிப்பாக, செய்தியாளர்கள் சந்திப்பைக்கூட மிக எதார்த்தமாக எதிர்கொள்கிறார்.

 

மேலும்,  சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து கோவை அல்லது சேலத்தில் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கப்படுத்தி விட்டார். தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை ஆவேசம் அடைந்தது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமியர்களை தி.மு.க. தூண்டிவிடுவதாகவும், இதனால் யாருக்கு பாதிப்பு சொல்லுங்கள் எனவும் ஆவேசம் காட்டினார்.

 

இதுமட்டுமன்றி அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்றும் சில தினங்களுக்கு முன்பு .ஸ்டாலினுடன் நீண்ட நேரம் காரசார வாக்குவாதம் செய்தார் முதல்வர். மேலும், “விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஏன் தோற்றீர்கள்?” என ஸ்டாலினை பார்த்து நேருக்கு நேராகவே கேட்டார். இப்படி பல விவகாரங்களிலும் முதல்வர் குரலை உயர்த்தி பதில் கொடுப்பது தி.மு.க. உறுப்பினர்களை கோபம் கொள்ளச் செய்துள்ளது.

 

இதனிடையே வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெறக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளாராம் ஸ்டாலின். அவரை எதிர்த்து தி.மு.க. சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வகணபதியை களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியான போடியிலும் தங்க.தமிழ்செல்வன் உட்பட வலுவான வேட்பாளர்களை களமிறக்க தி.மு.க. தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் தி.மு.க. தலைமை கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கவுள்ளது அ.தி.மு.க. இதை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் வெற்றிபெற்ற வைக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமைகளான முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் உள்ளது. இதில் தற்போது முதல்வராகவுள்ள எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் இவர்கள் சொந்த தொகுதியிலேயே வீழ்த்த தி.மு.க. முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் வேண்டுமானால் பரபரப்பு ஏற்படுத்தலாம். ஆனால், இவர்களை சொந்த தொகுதியில் எளிதில் வீழ்த்திட முடியாது என்பதே கள யதார்த்தமாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

நிமலன்