மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் – பா.ஜ.க. உச்சக்கட்ட மோதல்!

slider அரசியல்
KAMALNATH

 

இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் மத்தியபிரதேசமும் ஒன்று. அங்கு இப்போது கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இங்கே சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸின் இளம் தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.க.வுக்கு தாவினார். இவரது ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏக்களும் இப்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர். ஏற்கெனவே நூலிழையில் ஆட்சியை நடத்திவந்த கமல்நாத்துக்கு இதனால் பெரும்பான்மை குறைந்துள்ளது. இதற்காக எதிர்க் கட்சியான பா.ஜ.க. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போராட துவங்கியுள்ளது.

 

மத்தியபிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை குறைந்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்காக சட்டசபையில் நேற்று (16.3.2020) முதல்வர் கமல்நாத் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு. மத்தியபிரதேச அமைச்சர் ஒருவர் சட்டசபையில் கொரானாவை காரணம் காட்டி சட்டசபை மார்ச் 26-ம் தேதி ஒத்திவைக்க சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க அதன் நிமித்தம் சபாநாயகரும் மார்ச் 26-ம் தேதிக்கு சட்டசபை கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டார். இதன்படி நம்பிக்கை வாகெடுப்பும் தள்ளிப் போய்விட்டது.

 

இதனை மத்தியபிரதேச பா.ஜ.க. கடுமையாக எதிர்த்துள்ளது.  முன்னாள் முதல்வர் சவுராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்கள், கவர்னர் லால்ஜி தாண்டனை நேற்று (16.3.2020) கவர்னர் மாளிகையில் சந்தித்து உடனடியாக கமல்நாத் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கவர்னரும் இன்று (17.3.2020) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், சட்டசபையை பொறுத்தவரை சபாநாயகருக்கு அதிக அதிகாரம் இருப்பதால் இதற்கு சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. மேலும். மத்தியபிரதேச பா.ஜ.க. இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஒருவேளை நீதிமன்றம் இதில் அதிரடியாக முடிவெடுத்தால் இந்த விவாரத்தில் வேறு திருப்பங்கள் ஏற்படலாம். இல்லையென்றால் மார்ச் 26-ம் தேதி வரை காத்திருக்க வேண்டியதுதான் என்றும் கூறப்படுகிறது.

 

மத்தியபிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் இன்று (17.3.2020) சட்டசபையைக் கூட்டி கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறித்து முதல்வர் கமல்நாத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கமல்நாத், ‘’சட்டசபை மார்ச் – 26 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கவர்னர் பிறப்பித்துள்ள உத்தரவுக்கேற்ப சட்டசபை இன்று (17.3.2020) கூடுவதற்கான வாய்ப்பு இல்லை. தைரியம் இருந்தால் எங்கள் அரசுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யட்டும்; அதற்குபின் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம். நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய பா.ஜ.க. தலைவர்கள் தயங்குவது ஏன்? எங்கள் கட்சியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தலைவர்கள் சட்டவிரோதமாக பிடித்து வைத்துள்ளனர். எனவே நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பில்லை’’ என்று கூறியுள்ளார்.

 

இந்த சம்பவங்கள் சில மாதங்களுக்கு முன்பு நடந்த கர்நாடகா அரசியல் நிகழ்ச்சிகள் போன்றே நடந்துக் கொண்டிருக்கிறது. கவர்னருக்கும் , முதல்வருக்குமான மோதல் அங்கும் நிகழ்ந்தது. மத்தியபிரதேசத்திலும் பெரும்பானமையை இழந்துவிட்ட காங்கிரஸ் அரசு கடைசிக்கட்டமாக ஒரு பெரும் முயற்சியை எடுத்துப் பார்க்க திட்டமிடுவது அவர்கள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிபோடுவது மூலம் நன்கு வெளிச்சத்துக்கு வருகிறது. எது எப்படியோ சட்டசபபையில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை குறைந்து பா.ஜ.க.வின் 107 எண்ணிக்கை பெரும்பான்மையை நிரூபிக்குமானால் அங்கு வெகுவிரைவில் பா.ஜ.க. அங்கு அமைவது நிச்சயம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 

– தொ.ரா.ஸ்ரீ.