மாநாடு நடத்த திட்டமிடும் ரஜினிகாந்த்!

slider அரசியல்
RAJINIKANTH

 

நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு கூறிய ‘ஆட்சிக்கு ஒரு தலைமை. கட்சிக்கு ஒரு தலைமை’ என்கிற திட்டம் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் விவாதங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் ரஜினி மன்ற நிர்வாகிகள் மத்தியில் சில அதிருப்திகள் எழுந்திருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்தும், மாநாடு எங்கு நடத்துவது என்பது குறித்தும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார் என்றும் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கிறது.

ரஜினிகாந்த் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்,  ’’அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த பத்து தினங்களுக்குள் இருமுறை  மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் ரஜினிகாந்த்.  இதன் முடிவில் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றமே ஏற்பட்டது.  இதன் பின்னர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தான் இப்போது விவாதமாகிவரும் மூன்று திட்டங்களை கூறினார். ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கு வரவேற்பும் இருக்கிறது. இதெல்லாம் தமிழக அரசியல் நடைமுறையில் சாத்தியபடுமா என்கிற ரீதியில் அதிருப்தி குரலும் இருக்கிறது.

இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் விசாரிக்கையில்,  “தலைவர் எந்தத் திட்டத்தை முன்வைத்தாலும் அதை ஆதரிப்போம்.  தமிழக அரசியல் சூழலில் முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்லும் ஒரு தலைவராக எங்கள் தலைவர் உள்ளார். இதற்கு எங்கள் மன்றத்துக்கு வெளியேயும் பல்வேறு தரப்பிடமிருந்தும் எங்களுக்கு ஆதரவான குரல்கள் அதிகளவில் கேட்கத் தொடங்கியிருக்கிறது. எங்கள் தலைவர் அடுத்ததாக கட்சி பெயரை முடிவு செய்வது, கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வது என்பதில் மும்முரமாக இருக்கிறார். மேலும், கடந்த பேட்டியில் தலைவர் அண்ணா அவர்களை பாராட்டி பேசியிருந்தார். ஆகவே, அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல் கட்சி மாநாட்டை நடத்தவே தலைவர் விரும்புகிறார். அதற்கான அனைத்து வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகிறது” என்றார்கள்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போவது  உறுதி என்பதாகவே இப்போது நடைபெற்றும் வரும் காரியங்கள்  உணர வைக்கின்றன.  பெரிய கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லையென்றாலும் அவர் அறிவிக்கும் வேட்பாளர்களை தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் சந்திக்க வேண்டிய சூழலையும் ரஜினிகாந்த் தரப்பு உண்டாக்கியிருக்கிறது. இனி தமிழக அரசியல் பெரும் விறுவிறுப்பு களமாக மாறுவதற்கு அதிக சாத்தியங்கள் இருக்கிறது என்கிற பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரப்படுகிறது.

நிமலன்