கொரானா!  அமெரிக்காவுடன் மோதும் சீனா!

slider உலகம்

 

AMERICA-CHINA

 

இந்தியா உட்பட உலகமெங்கும் கொரானா வைரஸ் பாதிப்பு மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் சீனாவின் வுகான் நகரில் ஆரம்பமான இந்த வைரஸ் தொற்று இப்போது எல்லா நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. இதனால், அமெரிக்கா உட்பட சில நாடுகள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளன. இந்நிலையில், சீனா அதிகாரி ஒருவர், “இந்த கொரானா வைரஸை அமெரிக்காதான் சீனாவில் திட்டமிட்டு பரப்பியது” என்று கூறியுள்ளார். இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல் உருவாகும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் முக்கிய நகரமான வுகானில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா எனும் உயிர் கொல்லி வைரஸ் பரவியது. முதலில் சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு சென்றவர்கள் மூலம் வேறு நாட்டினருக்கும் பரவி வருகிறது. சீனாவில் மட்டும் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். உலகம் முழுவதும் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனா அரசு அடுத்து போர்க் கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக இப்போது அங்கு கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. எனினும் ஐரோப்பா உட்பட சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது கொரானோ.

இந்நிலையில் தற்போது சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஸோ லிஜியான் தனது  ட்விட்டரில்,    ‘’அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது? எந்தெந்த மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்? என்பது இதுவரை தெரியவில்லை. இந்த வைரஸை வுகானுக்கு அமெரிக்க ராணுவம்தான் பரவியிருக்கும். இந்த தகவலை வெளிப்படையாக தெரிவியுங்கள். இது தொடர்பாக எங்களுக்கு நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும் ’’ என்று  பதிவிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு  அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், ‘’தகவலை திரித்து கூறுவது கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு ஹாங்காங்கில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டமும் அமெரிக்க அரசு தூண்டுதல் பேரில் நடந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்” என்று கூறியுள்ளனர்.

அமெரிக்க ஊடகங்களில், இந்த வைரஸை சீனா தான் மற்ற நாடுகளுக்கு பரப்பி வருவதாக தகவல்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில், சீனா அதிகாரி ஒருவர் அமெரிக்க ராணுவத்தின் மீது பகிரங்கமாக இப்படியொரு குற்றச்சாட்டை கூறியிருப்பது உலக நாடுகளில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னும் பதில் அளிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.  உலகில் பயோ வார் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சில வருடங்களாகவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் வல்லுனர்கள் பேசியும் கட்டுரைகளில் எழுதியும் வருகின்றனர். இதன் தாக்கமும் வீரியமும் அப்படியொன்றாக இருக்குமோ என்கிற அச்சத்தைக்கூட பாமரன் மனதில் எழுப்பக்கூடும். ஆகவே, சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அபாயமளிக்கக்கூடிய இந்த விஷயத்தில் எல்லோரும் ஓரணியில் நின்று கொரானா வைரஸை முறியடித்து மனித குலத்தை காப்பாற்றும் பொறுப்பு இந்தியா உட்பட எல்லா நாட்டு  அரசுக்கும் இருக்கிறது.

தொ.ரா.ஸ்ரீ.