வீரபாண்டி ராஜாவுக்கு தூண்டில் போடும் பா.ம.க.!

slider அரசியல்

 

veerapandiraja

 

 

சேலம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டிய  ஆறுமுகம் மிகுந்த செல்வாக்கோடு இருந்தவர். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். அமைச்சராகவும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். இவரது மறைவுக்குப் பிறகு இவரது மகன் வீரபாண்டி ராஜாவுக்கு தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவி தரப்பட்டது. இது வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களுக்கு திருப்தியளித்தது.  ஆனால்,  சில மாதங்களுக்கு முன்பு வீரபாண்டி ராஜாவிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, செல்வாக்கில்லாத மாநில தேர்தல் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. இது நிமித்தம் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த ராஜாவை அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

வீரபாண்டிய ராஜா வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை வன்னியர் மெஜாரிட்டி சமுதாயம். இங்கு பா.ம.க.வுக்கு நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது. தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர் பதவி போனதிலிருந்து அப்செட்டில் வீரபாண்டிய ராஜா இருந்து வருவதை அறிந்த பா.ம.க. தலைமை, அவரை எப்படியும் தங்கள் கட்சிக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் அதிருப்தியில் இருக்கும் ராஜாவை தங்கள் பக்கம் இழுக்க அமைச்சர்கள் மட்டத்தில் களம் இறக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

இது குறித்து வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் சிலரிடம் விசாரித்தோம். அவர்கள், “சேலம் மாவட்டத்தில் தனது தந்தை வீரபாண்டி ஆறுமுகத்திற்கு இருக்கும் பெயருக்காகவும், அவருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் தனக்கு வரும் வாய்ப்புகளை தட்டிக்கழித்து வருகிறார் வீரபாண்டி ராஜா. ஆனால், மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதில் அவருக்கு அதிருப்தி இருப்பது உண்மைதான். இதன்பொருட்டு கொஞ்சநாளுக்கு முன்பு புதிதாக கட்சியில் முதன்மைச் செயலாளராகியுள்ள கே.என்.நேரு ஒரு சில வாக்குறுதிகள் கொடுத்துள்ளதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதை அவர் செய்து கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் வீரபாண்டி ராஜா. இதனால் தற்போதைக்கு தனக்கு மாற்றுக் கட்சி செல்லும் எண்ணமில்லை என்று தன்னிடம் தூது வந்தவர்களிடம் ராஜா கூறியிருக்கிறார்’’ என்றார்கள்.

தற்போதைக்கு கட்சி மாற விருப்பமில்லை என்ற முடிவில் வீரபாண்டி ராஜா  இருந்தாலும், அவரை எப்படியும் தங்கள் பக்கம் கொண்டுவந்திட முடியும்  என்கிற நம்பிக்கையில் பா.ம.க. தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க. தலைமையின் முடிவு என்னவென்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.  ஒருவேளை வீரபாண்டி ராஜாவுக்கு மாநில தலைமையிலிருந்தோ, மாவட்ட தலைமையிலிருந்தோ நெருக்கடிகள் அதிகரித்தால் அவர் கட்சி மாறுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்றும், அப்படி கட்சி மாறும்பட்சத்தில் அப்போது அ.தி.மு.க.வா? பா.ம.க.வா? என்கிற நிலை ஏற்பட்டால் ராஜாவின் முதல் சாய்ஸ்ஸாக பா.ம.க.வாகவே இருக்கும் என்கிறது சேலம் மாவட்ட அரசியல் வட்டார தகவல்கள்.

  -தொ.ரா.ஸ்ரீ.