மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் தேர்வு – அ.தி.மு.க.வில் வெடிக்கும் அதிருப்தி!

slider அரசியல்
thambidurai gkvaasan kbmunusamy

 

மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களிடத்தும், பெண்கள் அணியிலும் பெருத்த அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது அ.தி.மு.க.வுக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மக்களவை முன்னாள் சபாநாயகர் தம்பிதுரைமற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை மற்றும் கே.பி.முனுசாமி ஆகிய இரண்டு பேருக்கு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கியதில்தான் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்என்று கூறப்படுகிறது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழக வட்டாரத்தை விசாரிக்கையில், ‘’அ.தி.மு.க. இரட்டை தலைமை அறிவித்துள்ள கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகிய இரண்டு பேரும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள். அவர்களுக்கே தற்போது மீண்டும் மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்கப்பட்டுள்ளது.   அதுவும், கே.பி.முனுசமி, தம்பிதுரை ஆகிய இரண்டு பேரும் ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே எம்.பி. பதவி வழங்கியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த தவறை செய்திருக்க மாட்டார். கே.பி.முனுசாமி கடந்த மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் நின்று தோல்வி அடைந்தவர். தம்பிதுரையும் கடந்த இரண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் நின்று தோல்வி அடைந்தவர். இதன்பின்னர் கரூரில் நின்று தம்பிதுரை எம்.பி.யாக வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே தொடர்ந்து பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே இவர்கள் பதவிகளை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், மேடைகளில் தலைவர்கள் பேசும்போது, சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் உயர்ந்த பதவிக்கு வரலாம் என்கிறார்கள்.

மேலும், முன்னாள் அமைச்சர்   நத்தம் விஸ்வநாதன் மற்றும் மனோஜ் பாண்டியன் போன்றோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலங்களவை பதவி இழந்த இரண்டு பேர் பெண்கள் ஆவர். ஆகவே, ஒரு பெண்ணுக்காவது மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்கி இருக்கலாம். ஆனால், சில நாட்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் சர்வதேச பெண்கள் தினம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. ஆனால், பதவி என்று வரும்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. கட்சி பணிகளை செய்வதற்குதான் இவர்களுக்கு பெண்கள் தேவைப்படுகிறார்கள்’’ என்றார்கள்.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. மக்கள் செல்வாக்கு பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க.  எனும் கட்சி முதன்முறையாக சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கப் போகிறது. இதுவரை அ.தி.மு.க. சந்தித்து வெற்றி பெற்றதெல்லாம் இடைத்தேர்தல்கள் தான். ஆனால், பொதுத் தேர்தல் என்பது எப்போதும் கடுமையான பரீட்சையாகவே அமையும். இதற்கு கட்சியை ஒற்றுமையாகவும், பலமாகவும் வைத்திருக்க வேண்டும். மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்திருக்க வேண்டும். மக்கள் எண்ணம் என்னவென்று தேர்தல் முடிவின்போது தான் தெரியவரும். ஆனால், கட்சியை இப்போதே ஒற்றுமையாகவும், பலமாகவும் வைத்திருக்க வேண்டிய பெரும் பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடமும் உள்ளது. இவர்கள் இருவரும் தேர்தல் நெருங்கவுள்ள இந்த சமயத்தில் கட்சிக்குள் எந்த அதிருப்தியும் வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ரொம்பவும் முக்கியம் என்கிறார்கள் தமிழக அரசியல் நோக்கர்கள்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்