ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு என்ன பதவி?

slider அரசியல்

jothitraya sindya

 

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கமல்நாத் முதல்வராக இருந்து வருகிறார். இங்கே இன்னொரு காங்கிரஸ் தலைவரும் குவாலியர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவருமான ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் முதல்வராகப் பதவி வகிக்கும் கமல்நாத்துக்கும் இடையே பெரும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில்  கடந்த 10.3.2020 அன்று காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா  11.3.2020 அன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இந்த நிகழ்வுகள் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஜோதிராதித்யா சிந்தியா. அப்போது அவர் கூறுகையில்,  “பா.ஜ.க. தலைவர் நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி.  என்னை வரவேற்று பா.ஜ.க. குடும்பத்தில் இணைத்து ஓர் இடம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இரு விஷயங்கள் எனது வாழ்க்கையை மாற்றிவிட்டன. ஒன்று விமான விபத்தில் என் தந்தை இறந்த நாள். மற்றொன்று வாழ்க்கையில் மாற்றுப் பாதையை தேர்வு செய்ய முடிவு செய்த 10.3.2020 தினம். அந்த நாள் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது. காங்கிரஸ் கட்சி முன் போல் இப்போது இல்லை. காங்கிரஸ் கட்சி இளைஞர்களைப் புறக்கணிக்கிறது. மக்கள் சேவையாற்றுவது என்ற லட்சியத்தை காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு என்னால் செய்ய முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மத்தியபிரதேசத்திலிருந்து நான்கு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிந்தியா . ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க. உறுப்பினரிடம் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து மத்திய பிரதேச சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற மிகவும் பாடுபட்டார்.   இதற்கு பிரதிபலனாக காங்கிரஸ் தம்மை முதல்வராக்கும் என கருதியிருந்தார். ஆனால்,  அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், கட்சியிலும் முக்கிய பொறுப்பும் கிடைக்காமல் ஆட்சியிலும் பொறுப்புகள் ஏதும் கிடைக்காமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்த சிந்தியாவுக்கு அதுவும் கிடைப்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் கட்சியின் தலைமையிலிருந்து கிடைக்காததால் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய சிந்தியா பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளதால் அவருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் எத்தகைய பொறுப்பு வழங்குவது என்பது பற்றி பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ஆலோசனை நடத்தி வருவதாகவும்,  ஜோதிராதித்ய  சிந்தியாவை பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக்கி மத்திய மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி விரும்புவதாகவும் வந்த செய்திகளை அடுத்து, இப்போது மாநிலங்களவை வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார். மாநிலங்களவை உறுப்பினரான பிறகு அவருக்கு மத்திய அமைச்சர் பதவிகூட வழங்கப்படலாம் என்பதாகவும், எந்த துறையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கலாம் என்பது குறித்து பிரதமர் மோடி பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

விசாகன்