அதிரடி நடவடிக்கையில் காங்கிரஸ்  தலைமை!

slider அரசியல்

 

tksivakumar

 

 

காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 54 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.  மேலும், தான் ஆட்சி புரிந்துவரும் சில மாநிலங்களில் கூட, ஒவ்வொரு மாநிலமாக ஆட்சி பொறுப்பை பா.ஜ.க.விடம் இழந்து வருகிறது காங்கிரஸ். இப்போதுகூட மத்தியபிரதேசத்தில் பா.ஜ.க.விடம் ஆட்சியை இழக்கும் நிலையை எட்டியுள்ளது. அம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.க.வுக்கு தாவிவிட்டார். இது தேசிய அளவில் பெரும் சறுக்கலாக காங்கிரஸுக்கு அமைந்துள்ளது. இந்நிலையில் தென்னகத்தில் கர்நாடகாவில் காங்கிரஸை பலப்படுத்தும் நடவடிக்கையாக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மார்ச் 11ம் தேதி அன்று அதிரடியாக அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை.

கர்நாடக அரசியலில் கிங்மேக்கராக கூறப்படுபவர் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார். இவர் தன் சொந்த மாநிலத்தில் என்று மட்டுமல்லாமல் காங்கிரஸுக்கு வேறு ஒரு மாநிலத்தில் ஆட்சியில் சங்கடமோ நெருக்கடியோ ஏற்பட்டால் அதனை சரிசெய்ய முன் சென்று நிற்பவராகவும் பார்க்கப்படுகிறார். ஏனென்றால், இவர் மீது காங்கிரஸ் தலைமைக்கு அதீத நம்பிக்கையும் இருந்து வருகிறது. முன்பே இவர் கர்நாடக காங்கிரஸ் தலைவராக ஆகியிருப்பார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்காக அந்த முடிவை தள்ளிபோட்டு வந்தது காங்கிரஸ் டெல்லி தலைமை. ஆனால், இப்போது கர்நாடகாவில் காங்கிரஸை மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு கொண்டுவர சிவக்குமாரே சரியான தலைவராக இருப்பார் என்று முடிவுசெய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கர்நாடகாவைப் பொறுத்தவரை ஒக்கலிகா, லிங்காயத் சாதிகளின் வாக்குகள்தான் ஆட்சி அமைப்பதற்கு பெரும் பக்கபலமாக அமையும். அந்த வகையில்  ஒக்கலிகாக்களின் வாக்குகள் பெரிதும்  தேவகவுடாவின் மதசார்பற்ற கட்சிக்கே இருந்து வந்தது. ஆனால், சில வருடங்களாக தேவகவுடா கட்சியைவிட காங்கிரஸுக்கு அந்த சமூகம் அதிக ஆதரவளிக்க தொடங்கியது. இப்போது ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மாநிலத் தலைவராக நியமித்துள்ளது மூலம் அந்த சமூகத்தின் பெரும்பான்மையான வாக்குகள் காங்கிரஸுக்கே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸின் டெல்லி தலைமை முதிர்ச்சியாகவே செயல்பட்டிருக்கிறது என்பதான பேச்சுக்கள் கர்நாடக  அரசியல் வட்டாரத்தில் தீவிரப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் கட்சிக்கு தொடர் சரிவுகளாகவே நிகழ்ந்து வந்தது. அதன் டெல்லி தலைமை செயலிழந்ததுபோலவும் காணப்பட்டது. இது குறித்து தேசிய அளவில் ஊடகங்களில் விவாதங்களும் அரங்கேறி வந்தன. இந்நிலையில்தான் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் கிங்மேக்கர் போன்று செயல்படக்கூடிய ஒருவரை தலைவராக நியமித்து அதிரடி வேகத்தை காட்டியுள்ளது டெல்லி காங்கிரஸ் தலைமை. இதுபோன்ற வேறுசில நடவடிக்கைகளும் வரும்நாளில் இருக்குமா? என்பதுபற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால், அந்த கட்சி தேசிய அந்தஸ்தை தக்கவைக்க பல மாநிலங்களிலும் இதுபோன்று செயலில் இறங்குவது ஒன்றுதான் அதற்கு இருக்கும் ஒரே வழி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

குருபரன்