யெஸ் வங்கி விவகாரத்தில் மோதிக்கொள்ளும் பாஜ.க. – காங்கிரஸ்! 

slider அரசியல்

 

Rana-Kaboor

 

 

இந்தியாவில் இயங்கிவரும் தனியார் வங்கிகளில் அதிக பணங்களை கையாளும் ஒன்றாக யெஸ் வங்கியும் இருந்து வந்தது.  இந்த வங்கியை சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், இந்த வங்கியின் நிறுவனர் ராணாகபூர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்.  இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், எதிர்க் கட்சியான காங்கிரஸும் ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன. இவர்களிடையேயான யெஸ் வங்கியை முன்னிட்டான இந்த மோதல் பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளது.

தனியார் வங்கியான யெஸ் வங்கி பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியதைடுத்து பாரத ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கையில் இறங்கி, முதற்கட்டமாக அந்த வங்கியின் இயக்குநர்கள் குழுவை முடக்கி யெஸ் வங்கியை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.   இது தொடர்பான முறைகேட்டில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பையில் சமீபத்தில் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தங்கள் காவலில் எடுத்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும்,  ராணா கபூர் குடும்பத்தினர் செய்துள்ள ரூ.2,000 கோடி முதலீடுகள் தொடர்பாகவும், அவர்கள் வாங்கிக் குவித்துள்ள 44 விலை உயர்ந்த ஓவியங்கள் தொடர்பாகவும் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் 9.3.2020 அன்று ஆங்கில டி.வி. சேனல் ஒன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடமிருந்து ராணா கபூர் ஒரு விலை உயர்ந்த ஓவியத்தை வாங்கியுள்ளார் என செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் கிளிப்பிங்கை பாரதீய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். அந்த டுவிட்டரில், “இந்தியாவில் நடக்கிற ஒவ்வொரு நிதி குற்றத்துக்கும், சோனியா காந்தி குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சோனியா காந்திக்கு விஜய் மல்லையா தனது கிங் பிஷர் விமானத்தின் மேம்படுத்திய வகுப்பு டிக்கெட்டுகளை அனுப்புவது வழக்கம். அவர் இப்போது தலைமறைவாகவுள்ளார். நிரவ் மோடியின் திருமண நகை தொகுப்புகளை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். பிரியங்கா காந்தியிடம் ராணா கபூர் ஓவியங்கள் வாங்கி உள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு உடனடியாக காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அந்தக் கட்சி சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘’இப்படி குற்றம்சாட்டுவது அரசாங்கத்தின் திசை திருப்பும் உத்தியாகும். பிரதமராக மோடி பதவி ஏற்ற 2014-ம் ஆண்டில் இந்த வங்கியின் கடன்கள் ரூ.55 ஆயிரத்து 633 கோடியாக இருந்தது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அது ரூ. 2 லட்சத்து 41 ஆயிரத்து 499 கோடியாக உயர்ந்தது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பின்னர் இரண்டு ஆண்டுகளில் அந்த வங்கியின் கடன் ரூ.98 ஆயிரத்து 210 கோடியில் இருந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 534 கோடி என இரு மடங்காக ஏன் உயர்ந்தது? பிரதமரும், நிதி மந்திரியும் தூங்கி விட்டார்களா? அவர்களுக்கு எதுவும் தெரியாதா? அல்லது அவர்கள் உடந்தையா?   பிரியங்கா காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் எம்.எஃப். உசேன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு ராணா கபூரிடம் விற்பனை செய்துள்ளார். இந்த தொகை காசோலையாக பெறப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு பிரியங்கா காந்தியின் வருமான வரி கணக்கு தாக்கலின்போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய தர மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் தான் இந்தியாவெங்கும் உள்ள யெஸ் வங்கியின் அனைத்து வங்கிக் கிளைகளிலும் தங்கள் சக்திக்கேற்ற பணங்களை டிபாசிட் செய்தவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டவர்களாக இருக்க முடியும். இவர்கள் குடும்பத்தின் கல்வி செலவு, மருத்துவ செலவு என்று பல்வேறு காரியங்களுக்காக சிறுக சிறுக சேமித்த பணம் குறித்த பயம் அவர்களிடம் பெரியளவில் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதிலும் பா.ஜ.க.வும், காங்கிரஸும்  அரசியல் ரீதியாக மோதிக் கொள்வதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்பதாகவே சமூக வலைத்தள வட்டாரங்கள் மேற்கோள் காட்டி வரும் தகவல்கள் கூறுகின்றன.

              தொ.ரா.ஸ்ரீ.