மத்தியபிரதேச காங்கிரஸ் ஆட்சி ஏன் கவிழ்ந்தது!

slider அரசியல்
Jothraditya-Sindhiya

 

மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் முதலமைச்சராக உள்ளார். காங்கிரஸ் கட்சியின் இன்னொரு முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு துணை முதலமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் தற்போது ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸை விட்டு விலகியுள்ளார். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான  ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் தனது ஆதரவாளர்களுக்கும் தனக்கும்  எந்தவித முக்கிய பொறுப்புகளும் அளிக்கப்படவில்லை என்பதால்  ஜோதிராதித்யா சிந்தியா அதிருப்தி அடைந்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக இப்போது  தனது  ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேரை கர்நாடகாவில் தங்க வைத்துள்ள ஜோதிராதித்யா சிந்தியா இன்று (10.3.2020) டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அடுத்ததாக,  உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். இது முடிந்த சில மணிநேரத்திலே காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் விலகுவதாக அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு  ஜோதிராதித்யா சிந்தியா கடிதம் அனுப்பினார். இதன்மூலம் ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.க.வில் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.  மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகியதுள்ளதால் ஆளும் காங்கிரஸ் அரசுக்குச் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜோதிராதித்யா சிந்தியா, ‘’கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸில் முக்கிய நபராக இருந்தேன். தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது ’’ என்று குறிப்பிட்டுள்ளாராம்.

இந்த நெருக்கடி குறித்து இன்று (10.3.2020) போபால் நகரில் நடந்த ஹோலி கொண்டாட்டங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ’’மத்திய பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்கிறது.  சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பெங்களூரு கொண்டுசெல்ல பா.ஜ.க. மூன்று விமானங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.  பா.ஜ.க. ஏற்பாடு செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மாஃபியாக்களுக்கு எதிராக மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் நடவடிக்கை எடுத்ததால்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது” என்று கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டமன்றம் மொத்தம் 228 இடங்களை கொண்டது. இதில் தற்போதைய நிலவரப்படி 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன்படி காங்கிரஸின் பலம் 121லிருந்து 102 ஆக குறைந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இங்கு அடுத்து என்ன நடக்கும் என்று புதிராகவே உள்ளது. ஒருவேளை ராஜினாமா செய்ததுபோக மீதமுள்ள எண்ணிக்கையை வைத்து பா.ஜ.க. ஆட்சியமைக்கப் போகிறதா? அப்படி ஆட்சியமைக்க முயன்றால் ஜோதிராதித்யா நிலை என்னவென்று பல்வேறு கேள்விகள் எழுகிறது. அதேநேரத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழும் நிலையை அடைந்துவிட்டது என்பதாகவே தற்போதிய சூழ்நிலை உள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

              எம்.டி.ஆர்.ஸ்ரீதர்