ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவி கிடைத்தது எப்படி?

slider அரசியல்
Gk-Vasan

 

தமிழகத்தின் அ.தி.மு.க. ஆளும் கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க மற்றும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில்  உள்ளன. இதில் பா.ம.க. அன்புமணிக்கு ஏற்கெனவே அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.யை வழங்கிவிட்டது. இதற்கு அடுத்தபடியாக ஓட்டு சதவீதமுள்ள தே.மு.தி.க. இந்தமுறை தங்களுக்கு மாநிலங்களவை எம்.பி. கிடைக்கும் நம்பியிருந்தது. மேலும், இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கடியும் கொடுத்து வந்தது. ஆனால். அ.தி.மு.க. இரட்டை தலைமை, கூட்டணி என்கிற முறையில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு கொடுத்துள்ளது. இதன்படி ஜி.கே.வாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பு என்பது டெல்லி பா.ஜ.க. தலைமையால் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாவதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ஜி.கே.வாசன், ‘’ அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கடைசியாகத்தான் சென்று சேர்ந்தது. எனவே எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு சீட் மட்டுமே ஒதுக்கி தந்தனர். என்றாலும் நாங்கள் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்தோம். இந்த நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் த.மா.கா.வுக்கு ஒரு இடம் தர வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தோம். மாநிலங்களவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மீண்டும் நாங்கள் அ.தி.மு.க.விடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. பதவியை ஒதுக்கி தந்துள்ளது. இதற்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மாநிலங்களவை எம்.பி. பதவியை பெறுவதற்கு டெல்லியிலுள்ள பா.ஜ.க. உதவி செய்ததாக சிலர் சொல்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யை தேர்வு செய்ய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான் வாக்களிக்க வேண்டும். அந்த கூட்டணியில் உள்ள வேறு எந்த கட்சிக்கும் ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. பா.ஜ.க. கட்சிக்கும் ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் தயவால் நான் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டேன் என்பது சரியல்ல.

அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்கள் தேர்வு முழுக்க முழுக்க அ.தி.மு.க. தலைவர்களின் தேர்வாகும். அவர்கள் தங்களது விருப்பத்தின்படியே வேட்பாளர்களை தேர்வு செய்தனர். அ.தி.மு.க. தலைவர்களை நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் விவசாயிகளின் நலன் பற்றியும், மீனவர்கள் நலன் பற்றியும் விவாதித்துள்ளோம். அப்போது மேல்சபை பதவி பற்றியும் பேசுவோம். இதற்காக நான் கட்சி மாறி விடுவேன் என்றுகூட வதந்தி பரப்புகிறார்கள். இத்தகைய வதந்திகளில் எந்த உண்மையும் கிடையாது. தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நன்றாக வளர்ந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் எங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. எனவே தனித்தன்மையுடன் இயங்க த.மா.கா. விரும்புகிறது.

சிலர் நான் பா.ஜனதாவில் சேர்ந்து விடுவேன் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் வளர்ந்துவிடக் கூடாது என்று அவர்கள் இத்தகைய வதந்தியை பரப்புகிறார்கள். அவர்களது பகல் கனவு பலிக்காது. குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றில் பாதிப்பு வந்தால் சிறுபான்மை மக்களை காப்பாற்றும் முதல் கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும். தே.மு.தி.க. மாநிலங்களவை எம்.பி. பதவியை கேட்டது பற்றி உண்மையிலேயே எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் அ.தி.மு.க.வுடன் இத்தகைய ஒப்பந்தங்கள் செய்திருந்தனர் என்பதும் எனக்கு தெரியாது. பாராளுமன்ற மாநிலங்களவையில் ஏற்கனவே நான் எம்.பி.யாக இருந்திருக்கிறேன். அந்த சபை நடவடிக்கைகள் எனக்கு நன்கு தெரியும். நான் ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் மாநில அரசுக்கு உதவ முடியும். தமிழக மக்களின் நலனுக்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மாநிலங்களவை எம்.பி.யாக செய்வேன். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருந்து தமிழக மக்களுக்கு நன்மைகளை பெற்று தருவேன் ‘’ என்று கூறியுள்ளார்.

இதில் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (10.3.2020) செய்தியார்களிடம்  பேசும்போது, ‘’ மாநிலங்களவை தேர்தலில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவி கொடுத்தது முதல்வர், துணை முதல்வரின் சாணக்கியத்தனத்தைத்தான் காட்டுகிறது. தோழமை கட்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை உண்டு. அந்தக் கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அடுத்த முதல்வர் நாங்கள் தான் என்று கூறுவது வழக்கம். அதுபோலத்தான் தே.மு.தி.க. கூறியுள்ளது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும். ஏனெனில் மக்களின் வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி வைக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் கூட்டணி கட்சியினர் அவர்களது கொள்கைப்படி பணியாற்றுவார்கள். பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் எதையாவது செய்வார். திருநாவுக்கரசர் நண்பர் என்ற முறையில் அவரை சந்தித்து இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

              நிமலன்