அன்பழகன் வகித்த பதவிக்கு தி.மு.க.வில் கடும் போட்டி!

slider அரசியல்

 

anbalagan

 

 

சமீபத்தில் தி.மு.க. பொதுச் செயலாளராக 42 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் காலமானார். தி.மு.க. பொறுத்தவரை பொதுச் செயலாளர் என்பது முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும்.  தற்போது இந்த பதவிக்கு தி.மு.க. முன்னணித் தலைவர்களிடையே பெரும்  போட்டி நிலவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இது கட்சிக்குள் பெரும் மோதலையும், பிளவையும் ஏற்படுத்திடுமோ என்கிற அச்சமு8ம் தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.,வில், கட்சித் தலைவர் பதவிக்கு அடுத்ததாக அதிகாரமிக்க பதவியாக, பொதுச்செயலர் பதவியுள்ளது. இந்த பதவியில்  42 ஆண்டுகளாக, பொதுச்செயலராக கோலோச்சியவர் அன்பழகன். கருணாநிதியின் உற்ற நண்பராக விளங்கியதால் இந்த பதவிக்கு கட்சியில் யாரும் போட்டியிட்டதில்லை.

கடந்த 7-ம் தேதியன்று உடல் நலக்குறைவால்  அதிகாலை அன்பழகன் காலமானார். இதனால்,  தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலர் யார் என்பதில், கட்சி மேலிட தலைவர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலர் பதவியைப் பிடிக்க பொருளாளர் துரைமுருகன் விரும்புகிறார். அன்பழகனுக்கு அடுத்த மூத்த தலைவர் துரைமுருகன் தான் என்பதால், அவருக்கு பொதுச்செயலர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், முதன்மை செயலர் பதவியிலிருந்து, டி.ஆர்.பாலு விடுவிக்கப்பட்டதால் அவருக்கும் பொதுச்செயலர் பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ஒருவேளை பொதுச்செயலர் பதவிக்கு  துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் வகித்துவந்த பொருளாளர் பதவியில் அமர தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களான  டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, அ.ராஜா போன்றவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அன்பழகனின் படத் திறப்பு நிகழ்ச்சியை வரும்   14-ம் தேதி நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக புதிய பொதுச்செயலர் நியமிக்கப்படலாம் என கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

மேலும்,  திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாயத்திற்கும், தன் பேச்சு, எழுத்து, மக்கள் பணி வாயிலாக தொண்டாற்றிய பெருமை அன்பழகனுக்கு உண்டு. எம்.பி.- எம்.எல்.சி,- எம்.எல்.ஏ.,  அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர். அவரது உடலை  அரசு மரியாதையுடன் போலீஸார் குண்டு மழை பொழிய, தகனம் செய்திருக்கலாம். இதற்கு முன்பாக பெரியார், மூப்பனார், சிவாஜி போன்றவர்களின் உடலுக்கு  அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.  இதேபோல காலமான பேராசிரியர்அன்பழகனுக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்தார். ஆனால், தி.மு.க., மவுனம் சாதித்ததால் அவரது கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்கவில்லை.

விரைவில் தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் அதன் முன்னணித் தலைவர்களில் ஒருவர் அமர்த்தப்படும் வரை இது குறித்த பேச்சுக்கள் பல்வேறு விதமாக எழுந்து கொண்டே தான் இருக்கும். அந்த பதவியில் ஒருவர் நியமிக்கப்பட்டவுடன் இந்த பேச்சுக்களும் அடங்கிவிடும். இதில் பேராசிரியர் அன்பழகனுக்கு அரசு மரியாதை தகனத்துக்கு தி.மு.க. தலைமை தீவிரமாக செயல்படாத பின்னணி குறித்து வரும் நாள்களில் இன்னும் அதிகமான விமர்சனங்களை தி.மு.க. எதிர்கொள்ள வரவேண்டியதும் வரலாம் என்கிற பேச்சும் தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

  • தொ.ரா.ஸ்ரீ.