ராமர் கோவில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு!

slider அரசியல்

 

ayodhya-temple

 

 

கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உத்தரபிரதேசத்திலுள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய  ராமர் கோவில் – பாபர் மசூதி இடம் குறித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் பாபர் மசூதிக்கு அதே அயோத்தியில் வேறு ஒரு இடத்தில் ஐந்து ஏக்கர் இடமும் ஒதுக்கி தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பை பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரித்ததும், பல அமைப்புகள் எதிர்த்ததும் நடந்தது. தற்போது இந்திய அளவில் பிரபலமான ஒரு முஸ்லிம் அமைப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை  பல வருடங்கள் விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 9- தேதி இறுதி தீர்ப்பினை வழங்கியது. தனது தீர்ப்பில்,  ‘சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் இருந்ததாக  தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘காலி நிலத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. அதனால் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது. அங்கு ராமர் கோவில் கட்டலாம்’ என்று தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் பணிகள் துவங்கியுள்ளன.  இதற்காக மத்திய அரசு அறக்கட்டளையும் அமைத்துள்ளது.

இந்நிலையில்தான்  உச்ச நீதிமன்றத்தில்  ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ என்கிற அமைப்பு சீராய்வு மனு  ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில்,  ‘அயோத்தி வழக்கில் நாங்கள் முக்கியமான மனுதாரர் இல்லை. எனினும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு எங்களின் உரிமைகளை பாதித்து உள்ளது. அதனால் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். எங்களின் சீராய்வு மனு மீது  நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கெனவே உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த  கட்சி ஒன்று இதேபோல் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த வழக்குதான் இந்த ராமர் கோவில் சம்பந்தபட்ட வழக்கு. இந்த வழக்கு நிமித்தம் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல சமயங்களில் மத மோதல்களும் நடைபெற்றுள்ளது. இதில் ஏகப்பட்ட மனித பலிகளும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவாக சமீபத்தில்தான் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. இப்போது இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சீராய்வுமனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொ.ரா.ஸ்ரீ.