ஆட்சியைக் கவிழ்க்க சதி – எதிர்க்கட்சிகள் மீதுநாராயணசாமி புகார்!

slider அரசியல்
Narayanasamy

 

தென்னிந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஒரே இடம் புதுச்சேரி மட்டும்தான். இங்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி முதல்வராக இருந்து வருகிறார். இவருக்கும் புதுவை கவர்னராகவுள்ள கிரண்பேடிக்குமான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ரங்கசாமி பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க பார்ப்பதாக முதல்வர் நாராயணசாமி தற்போது கூறியுள்ளார்..

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக கடந்த நான்கரை ஆண்டுகளாக அமைச்சர் நமச்சிவாயம் இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மீண்டும் புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக டெல்லி மேலிடத்தால் அறிவிக்கப்பட்டார்.

இது குறித்து புச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒரு பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் நாராயணசாமி,   ’’புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுள்ள ஏ.வி.சுப்ரமணியனுக்கு எனது வாழ்த்துக்கள். அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சி தலைவராக நான்கரை ஆண்டுகள் இருந்துள்ளார். அவரது தலைமையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றோம். அதன்பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு வெற்றியே கிடைத்துள்ளது. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தொடர்ந்து நமக்கு தொல்லை கொடுத்து வருகிறது. கவர்னர் கிரண்பேடி அனைத்து கோப்புகளையும் திருப்பி அனுப்புவதை தவிர வேறு எந்தவேலையையும் செய்வதில்லை. எதிர்க்கட்சி தலைவர் எதிரி கட்சி தலைவராக செயல்படுகிறார். சட்டபேரவை நடைபெறும் போது வருவதில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை. புதுவையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ரகசியமாக சந்தித்து வருகிறார். மக்களுக்கு ஆதரவான பிரச்னைகளில் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதனை செய்யாமல் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அவரின் செயல்பாடுகளை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுவான கட்சியாக மாற்ற வேண்டும். இனிவரும் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்படும் கூட்டணிகள் உடனுக்குடன் புதுச்சேரியிலும் எதிரொலிப்பது வழக்கம். தமிழகம்போலவே அங்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் உச்சகட்டம் அடைந்திருக்கிறது. இதன் நடுவில் இப்போது புதிய பரபரப்பாக ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி என்று முதல்வர் நாராயணசாமி சொல்லியுள்ளார். அப்படி ஏதும் நடந்து ஆட்சி கவிழுமானால் அடுத்து அமையும் கூட்டணியில் ரங்கசாமி கட்சி மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. என்கிற புது கூட்டணி ஏற்படும். இது புதுச்சேரி அரசியலுக்கு ரொம்பவே புதிது. இதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பது அடுத்த சட்டசபை தேர்தலின் முடிவிலே தெரியவரும்.

  • நிமலன்