ரஜினிகாந்துடன் அன்புமணி சந்தித்து பேசிய ரகசியம் எது!

slider அரசியல்
அன்புமணி-ரஜினிகாந்த்

 

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கப்போவது உறுதி என்கிற ரீதியில் தகவல்கள் வந்திருக்கும் நிலையில், ரஜினியுடன் பா.ம.க. கூட்டணி சேரவுள்ளது என்கிற தகவலும் வந்திருப்பதால், ரஜினி அரசியல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு அச்சாரமாக கடந்தவாரம் நடிகர் தனுஷ் வீட்டில் ரஜினிகாந்தும், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணியும் ரகசியமாக சந்தித்து பேசியுள்ள தகவலும் தமிழக அரசியலில் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நடிகர் ரஜினிகாந்தை பொதுமேடைகளில் பா.ம.க. விமர்சிக்காத வார்த்தைகளே இல்லை. ரஜினிகாந்தின்  ‘பாபா’ படம் வெளியானபோது அந்தப் படத்தை திரையிட முடியாமல் ரஜினிகாந்த் பட்டபாடு தமிழகம் அறியும். குறிப்பாக,  வட மாவட்டங்களின் முந்திரிக் காடுகளில்  ‘பாபா’ திரைப்படப் பெட்டியை பா.ம.க.வினர் பதுக்கி வைத்த சம்பவமும் நடந்தது. அதே ரஜினிகாந்துடன் கொஞ்சநாளாக பா.ம.க. தலைமை நெருக்கம் காட்டுவது தமிழக அரசியலில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  சில மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தொடங்கப் போகும் அரசியல் கட்சியின் பிரதான கூட்டணிக் கட்சியாக பா.ம.க. இருக்கும் என்று தமிழருவி மணியன் கூறியிருந்தார்.  இதனை பா.ம.க. நிராகரிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் பா.ம.க.வை கூட்டணியில் தக்க வைக்க ஆளும் அ.தி.மு.க. பல்வேறு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சமீபத்தில் சென்னையிலுள்ள தமிழ் சினிமா பிரபலமும், ரஜினிகாந்தின் மருமகனுமான நடிகர் தனுஷ் வீட்டில் ரஜினிகாந்தை பா.ம.க. இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி சந்தித்து பேசியுள்ளார் என்பதான தகவல்.  இச்சந்திப்பின்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தனர் என்றும், மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை ஆட்சிக்கு வரவிடாமல் எப்படியும் தடுக்க வேண்டும் என்பதே இருவரது ஒற்றை இலக்காகவும் பேசப்பட்டது என்றும், வட தமிழகத்தில் பா.ம.க.வும் ரஜினிகாந்த் கட்சியும் இணைந்து முழுமையாக செயல்பட்டால் தி.மு.க.வால் ஆட்சி அமைக்கவே முடியாது என்றெல்லாம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசியல் வட்டாரம் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை முக்கிய தலைமையாக வைத்தே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று  வருகிறது. இதில் மூன்றாவது அணி முயற்சிகள் பலமுறை செய்யப்பட்டு தோற்றுதான் போயுள்ளன. இதற்கு உதாரணங்கள் வைகோவும், விஜய்காந்தும். இவர்கள் நாளடைவில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் இணைந்து அரசியல் செய்ததையும், செய்து வருவதையும் தமிழக மக்கள் கவனித்தே வருகிறார்கள். இப்போது ரஜினியுடன் பா.ம.க. இணைந்து ஒரு அரசியலை முன்னெடுத்தால் அதுவும் மூன்றாவது அணியாகவே கருதப்படும். அதேநேரத்தில் இந்த முயற்சி பழைய மூன்றாவது அணிக்கெல்லாம் நடந்ததுபோல நடக்குமா? அல்லது புதிய திருப்பங்கள் ஏதேனும் அரங்கேறுமா? என்பது குறித்து அறிய குறைந்தபட்சம் ஒரு தேர்தலாவது தேவைப்படும். அது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலாகக்கூட இருக்கலாம்.

– குருபரன்