மனித உரிமை கவுன்சிலை மதிக்காத இலங்கை அரசு!

slider உலகம்
rajapakshea brothers

 

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நீதி வேண்டி ஐ.நா. மன்றத்தில் ஈழத் தமிழர்கள் சார்பில் பல்வேறு முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகள் 2015-ம் ஆண்டில் சர்வதேச மனித உரிமை கவுன்சிலில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தன. தற்போது இதில் இலங்கை அரசு எடுத்துள்ள புதிய முடிவு உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட சண்டையில் லட்சக் கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க் குற்றம் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகள் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தில் இலங்கையும் ஓர் அங்கம்.

இதில் இப்போது இலங்கை ராணுவ தளபதி சாவேந்திர சில்வா, அமெரிக்கா வருவதற்கு அமெரிக்கா தற்போது தடை விதித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கை அரசு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 12 நாடுகள் கொண்டுவந்த போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.

இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே, 26-ம்தேதி ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அப்போது இந்த முடிவை அவர் அதிகார பூர்வமாக அறிவிப்பார் என்றும்,மேலும், ஐ.நா. மனித உரிமை ஆணையர் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பார் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் சில தினங்களுக்கு முன்பாக இலங்கை வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆர்யசின்கா ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவரை நேரில் சந்தித்து இந்த முடிவை தெரிவித்துள்ளார் என்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

2009-ம் ஆண்டு இறுதிப் போரில் தங்கள் உறவுகளை இழந்த ஈழத் தமிழர்களுக்கு ஒரே நம்பிக்கையாக இந்த தீர்மானம் இருந்து வந்தது. இதில் தங்களுக்கு சர்வதேச சமுதாயம் நீதி வாங்கித் தரும் என்றும் நம்பியிருந்தனர். இப்போது இலங்கையில் புதிதாக அதிபராகியுள்ள கோத்தபய ராஜபக்‌ஷேவும், போர் நடைபெற்ற சமயத்தில் அதிபராக இருந்த ராஜபக்‌ஷேவும் இப்படியான முடிவை எடுக்கத் துணிந்துள்ள நிலையில், வீட்டோ அதிகாரம் கொண்ட அமெரிக்காவும், இங்கிலாந்தும் மற்ற நாடுகளும் இவ்விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

நிமலன்