பா.ம.க. பொதுக்குழுவில் காத்திருக்கும் ரகசியம்!

slider அரசியல்

 

ramadas-rajinkanth

 

தமிழகத்தில், ஆளும் கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடித்து வந்தபோதும், அதன் கட்சித் தலைவர் ராமதாஸ் பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் தனி மதிப்பு இருந்து வருகிறது. இதற்கு நிறைய உதாரணங்கள் கடந்த காலங்களில் உண்டு. சமீபத்திய உதாரணம்தான் ரஜினிகாந்த் ஆதரவாளராக கருதப்படும் தமிழுருவி மணியன் பேசிய பேச்சு.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, “ரஜினிகாந்த் தலைமையிலான கட்சியில் பா.ம.க.வும் கூட்டணியில் உண்டு” என்று பேசியிருந்தார் தமிழருவி மணியன். இதற்கு ராமதாஸ்,  ‘முதலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் அப்புறம் கூட்டணி குறித்து யோசிக்கலாம்’ என்று பதில் தந்திருந்தார். இந்தப் பதிலே பல வினாக்களை தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுப்பியிருந்தது. இந்நிலையில்தான் இன்னும் சில தினங்களில், அதாவது மார்ச் 1-ம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூடுகிறது. இதில் ரஜினிகாந்து மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து பா.ம.க. சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வரும் மார்ச் 1-ம் தேதி பா.ம.க.வின் தேர்தல் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தமிழக அரசியலில் மிகவும் உற்று நோக்கப்படுகிறது. தனது மகன்   அன்புமணியை முதல்வராக்குவது என்பதுதான் டாக்டர் அய்யாவின் நீண்டகால கனவு. இதனை முன்னிட்டு டெல்லி லாபி மற்றும் ரஜினிகாந்த் மூலம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. தலைமையிடம் பேச முயன்றதாகவும் முன்பு கூறப்பட்டது. ஆனால், தமிழுருவி மணியன் பேட்டியைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க. தலைமை 45 முதல் 50 தொகுதிகள் வரை பா.ம.க.வுக்கு ஒதுக்குவது தொடர்பாக முதல்கட்டமாக முடிவு செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் கசிந்தது. அது உறுதியானதா என்பது தெரியவில்லை. ஆனால், தமிழுருவி மணியன் பேட்டிக்கு, “அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம்” என்று ராமதாஸ் பதிலளித்தார்.

கடந்த காலங்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் மாற்று சாதி கட்சியினரின் ஓட்டுகள் பா.ம.க.வுக்கு இரண்டு, மூன்று தேர்தல்களில் கிடைக்காமல் போனது. இதனால் ரஜினிகாந்த் கட்சி துவக்கிய பின் அவருடன் கூட்டணி வைத்தால் பிற சாதியினரின் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும், அதை வைத்து பெரும் வெற்றிகளை அடையலாம் என்பதே பா.மக.வி.ன் திட்டமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.  மேலும், ராமதாஸ் கையில் எடுத்துள்ள சமூக நீதி கொள்கைக்கு ரஜினிகாந்த் முன்னுரிமை கொடுக்கவுள்ளார் என்றும், சமூக நீதி அடிப்படையில் எல்லா சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவும், அடிப்படை வசதிகள் கிடைக்கவும் ராமதாஸ் – ரஜினி தரப்பு இணைந்து செயல்படும் என்று பா.ம.க.வின் பெரும்பாலான தொண்டர்களும், ரஜினி ரசிகர்களும் விரும்புகிறார் என்கிற கள நிலவரத்தையும் ராமதாஸ் மனதில் வைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இன்னும்  பா.ம.க.வுக்கு வடமாவட்டங்களில் நல்ல வலுவான கட்டமைப்பு இருந்து வருகிறது. ஓட்டுக்களும் கணிசமாக இருந்து வருகிறது. இதை எப்படியும் ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொள்ளவே பார்ப்பார் என்றும், இப்போதைக்கு கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு மூத்த அரசியல் தலைவராக இருப்பது ராமதாஸ் என்பதால், அவருடன் கூட்டணி வைக்கவே ரஜினிகாந்த்  விரும்புவதாகவும் அவரது தரப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே பா.ம.க. தான்  ‘பாபா’ பட விவகாரத்தில் ரஜினிகாந்துடன் கடுமையாக மோதியது. ரஜினியும் இந்த விஷயத்தில் கோபப்பட்டு பேசியதும் நடந்தது. ஆனால், காலம் இவர்கள் இருவரையும் இணைத்து பேசும் அளவுக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்து மூன்றாவது ஒரு கட்சி அல்லது அணி என்பது தமிழகத்தில் பலராலும் முயற்சி செய்யப்பட்டு தோற்றுபோன ஒன்றாகத்தான் தமிழக அரசியல் வரலாறு கடந்த நாற்பதாண்டு காலமாக நிரூபித்து வருகிறது. இதில் இப்போது ரஜினி – ராமதாஸ் கூட்டணி என்பதாக மூன்றாவது அணி முயற்சி தீவிரமான விவாதமாகி வருகிறது. இதில் பா.ஜ.க.வும் சேரும் சாத்தியங்கள் இருந்தபோதும் மூன்றாவது அணி என்கிற ஒன்று தமிழகத்தில் எடுபடுமா? இதைப் பொறுத்தவரை இப்போதைக்கு விடை தெரியாத ரகசியமாகவே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்.