ரஜினிக்கு பலம் சேர்க்க தயாராகும் மு.க.அழகிரி!

slider அரசியல்
rajini-mka

தி.மு.க.விலிருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க கலைஞர் கருணாநிதி மறைவுக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன. ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. பெற்றபிறகும் அழகிரி தி.மு.க.வில் இணைவது என்பது சாத்தியம் இல்லை என்கிற நிலையை அடைந்தது. இந்நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் தென்மாவட்டத்தில் ரஜினிக்கு பலம் சேர்க்கும் ஒருவராக அழகிரி செயல்படக்கூடும் என்று தற்போது வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், அழகிரி மெல்ல மெல்ல தி.மு.க.வுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார். தேர்தல் நேரம் நெருங்கும் நிலையில் அழகிரியால் தென் மாவட்டங்களில் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அக்கட்சி தலைமை கருதுகிறது. இதனால் மீண்டும் சமாதானப் பேச்சுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.   அதேநேரத்தில் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் நடிகர் ரஜினிகாந்த் மேற்கொண்டு வருகிறார். அவரது கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடைபெறலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு மு.க. அழகிரி முழு ஆதரவு தருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் பெருமளவு இம்மாநாட்டில் பங்கேற்பார்கள் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அழகிரி தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஆதரவாளர்களுக்கு இதுமாதிரியான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மதுரை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின்  வட மாட்டங்களில்  பா.ம.க. என்றும், தென் தமிழகத்தில் மு. க. அழகிரி என்றும் கைகோர்த்துக் கொண்டு இயங்கினால் தி.மு.க. ஆட்சிக்கு வருவதை எளிதில் தடுக்கலாம் என்று ரஜினி தரப்பு யோசிப்பதாகவும், இதற்காக ரஜினியின் நீண்ட கால நண்பராக இருந்துவரும் அழகிரியை இந்த விஷயத்தில் பேசி சம்மதிக்க வைத்துவிட்டதாகவும், இதன் வெளிப்பாடுகள் இன்னும் சில மாதங்களில் வெளியில் தெரிய தொடங்கும் என்கிற பேச்சு தமிழக அரசியல் களத்தில் அலசப்படுவது தொடங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

  • விசாகன்