தப்பித்த ஓ.பி.எஸ். – ஆபத்து நீங்கிய அ.தி.மு.க. அரசு!

slider அரசியல்

 

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. கட்சியும் இரண்டு அணியாக பிரிந்த சம்பவமும் நடைபெற்றது.

2017-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழக அரசியலில் பெரும் புயல் வீசியது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ. பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்தினார்.  எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 2017 பிப்ரவரி 18-ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிருப்தி அணியாக செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.   இதனால் அ.தி.மு.க கொறடா உத்தரவை மீறிய ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கியது தி.மு.க.. சில மாதங்களிலேயே ஓ.பி.எஸ். மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஐக்கியமானர். இதனால் தகுதி நீக்கம் செய்யக்கோரிய தி.மு.க. மனு கிடப்பில் போடப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறியது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவரும் இந்த மனு விசாரணைக்கு வந்தால் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோகும். அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என கணக்குப் போட்டு காத்திருந்தது தி.மு.க.

மேலும்,  எதிர்க்கட்சியான தி.மு.க. எதிர்பார்த்தபடியே இந்த வழக்கு  சில வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகரின் நடவடிக்கைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதனால் தி.மு.க. முகாம் மேலும் உற்சாகமாகியது.   இந்நிலையில் இன்று (14.2.2020) உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மற்றும் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் சபாநாயகரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தி.மு.க. தரப்பை பெரும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்தும் உள்ளாக்கியிருப்பதாகவும், இனி அ.தி.மு.க. ஆட்சி ஆபத்தான எதுவும் இல்லாதபட்சத்தில் அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்கும் பின்னணி வேலைகளில் முழுமூச்சாக இறங்கியிருப்பதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்படுகிறது.

  • நிமலன்