டெல்லி தேர்தல் தோல்விக்கு குறித்து பேசிய அமித்ஷா!

slider அரசியல்

 

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி யூனியன் தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது. மத்தியில் ஆளுங்கட்சியாகவுள்ள பா.ஜ.க.. பெரும் முயற்சிகள் எடுத்து டெல்லியைக் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டது. ஆனாலும் படுதோல்வி தான் பா.ஜ.க.வுக்கு கிடைத்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வின் சில தலைவர்கள் பேசிய பேச்சுக்கள் இந்த படுதோல்விக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் பா.ஜ.க.வுக்குள்ளே சில முணுமுணுப்புகள் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளது. இதுமாதிரியே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருப்பது பெரும் பரபரப்பாகியுள்ளது.

டெல்லியில் மொத்தம் 70 சட்டமன்ற தொகுதிகள். இதில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 90 சதவீத இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க. 10 சதவீத இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. இதன் மூலம் டெல்லி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய அடியாக  சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

பா.ஜ.க.வின் சார்பில் டெல்லிக்கு என்று சிறப்பு செயல் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஏறக்குறைய பா.ஜ.க.வின் 250 எம்.பி.க்கள் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டனர். இந்த தேர்தல் களத்தில் கடந்த 27-ம் தேதி நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க. கட்சியை சேர்ந்த நட்சத்திர பேச்சாளரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாக்கூர் ‘தேசத்துரோகிகளை சுடுங்கள்’ எனப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் அனுராக் தாக்கூருக்கு 72 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தடையும் விதித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி தேர்தலுக்கு பிறகு எதுவும் கருத்து சொல்லாமல் இருந்துவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 13.2.2020 அன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார், அப்போது அமித்ஷா பேசுகையில், ”குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நான் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்துவிட்டேன். இந்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தைவிட ஆதரவாக நடைபெறும் போராட்டங்களே அதிகம். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவை தேர்தல் முடிவுகளை பிரதிபளிக்கவில்லை.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது சி.ஏ.ஏ.க்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை குறித்து பேசும்போது  ‘தேசத்துரோகிகளை சுடுங்கள்’ போன்ற கருத்துக்கள் தெரிவித்ததை தவிர்த்திருக்கலாம். இந்த கருத்துக்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம் மக்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது இல்லை. இந்த சட்டம் எந்தவித பாகுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. சி.ஏ.ஏ. குறித்து என்னிடம் யார் வேண்டுமானாலும் விவாதம் நடத்தலாம். அதற்கு நான் தயாராக உள்ளேன். என்னுடன் விவாதம் நடத்த வருபவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா? என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி மீது உரிய சட்ட விதிகள் பின்பற்றப்பட்டே பொது பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அங்கு வருபவர்களை அரசு தடுப்பதில்லை” என்று பேசியுள்ளார்.

டெல்லி யூனியனில் பா.ஜ.க. அடைந்த படுதோல்விக்கு அமித்ஷாவே காரணம் என்று சொந்தக் கட்சியினரே பேசி வருகிறார்கள் என்றும், பிரதமர் மோடிகூட அமித்ஷா விஷயத்தில் வருத்தத்தில் இருப்பதாகவும், இதன் பின்னணியில் விரைவில் நிகழவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் அமித்ஷாவிடம் உள்துறை பொறுப்புக்குகூட பறிக்கப்படலாம் என்பதாக பேசப்பட்டுவந்தது. இந்நிலையில்தான் நேற்று அமித்ஷா ‘துரோகிகளை சுடுங்கள்’ போன்ற பேச்சுக்களை தவிர்த்திருக்கலாம் என்கிற பேச்சு வெளியாகியிருக்கிறது. மோடி, அமித்ஷாவும் பா.ஜ.க.வில் முன்னணிக்கு வந்தபிறகு ஒரு தேர்தல் தோல்விக்காக தங்கள் கட்சியின் முக்கிய தலைவரின் பேச்சை தவிர்த்திருக்கலாம் என்று விமர்சனம் செய்திருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்