மீண்டும் காங்கிரஸ் தலைவராகும் ராகுல் காந்தி!

slider அரசியல்

 

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று இரண்டாவது முறை பிரதமராக மோடி பதவியேற்றார். பா.ஜ.க.வின் இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்யவும் காரணமாக அமைந்துவிட்டது. ராகுலின் ராஜினாமாவை காங்கிரஸ் முன்னணித் தலைவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றபோதும் ராகுல் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்ததால், அரைகுறை மனதுடன் ஏற்றுக் கொண்டு இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியை செயல்பட வைத்தனர். இந்நிலையில் மீண்டும் ராகுலை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க பெரியளவில் முயற்சி எடுத்து வருகிறார்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்  என்கிற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வந்தாலும், அவரால் முன்புபோல கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை. உடல்நிலையும் அவருக்கு பழைய ஒத்துழைப்பை தரவில்லை. எனவே, விரைவில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு மீண்டும் ராகுல் காந்தியே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையே பெரும்பாலான காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விரும்புகிறார்கள். அவரை மட்டுமே தலைவராக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களால் கட்சிக்கு செல்வாக்கு பெற முடியாது என்றும் கருதுகின்றனர்.

இதில் குறிப்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.  ஏறக்குறைய இதற்கு ராகுல் காந்தி சம்மதித்து விட்டதாகவும் செய்திகள் கசிகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாநாடு அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்படவிருக்கிறது. அதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். அதாவது வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று  காங்கிரஸ் கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் டெல்லி யூனியன் தேர்தல் முடிவுகள் வெளியானது.  70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் ஓர் இடத்தில்கூட காங்கிரஸால் பெறமுடியவில்லை. மேலும், வாக்கு சதவீதம் நாலரை என்கிற அளவுக்கு படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இது தேசிய அளவில் காங்கிரஸுக்கான மதிப்பை பெருமளவு சரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸுக்கு புத்துயிர் கொடுக்க ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முயற்சி எடுப்பது காலம் கருதி எடுக்கவுள்ள பாராட்டுதலுக்குரிய முடிவு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்